அதன்பின் தாவீது, “நான் சவுலின் கையினால் எந்த நாளிலாகிலும் ஒரு நாள் அழிக்கப்படுவேன். எனவே பெலிஸ்தியரின் நாட்டுக்குத் தப்பி ஓடிப்போவது தான் நான் செய்யக்கூடிய புத்தியான செயல். அப்பொழுது சவுல் இஸ்ரயேலில் எங்கேயும் என்னைத் தேடுவதைக் கைவிடுவான். நான் அவனுடைய கையிலிருந்து தப்பிவிடலாம்” என நினைத்தான்.
அப்பொழுது தாவீது ஆகீஸிடம், “என்னிடம் உமக்குத் தயவு இருந்தால் நான் வாழ்வதற்கு உம்முடைய நாட்டுப்புறப் பட்டணங்களில் ஒன்றை ஒதுக்கித் தாரும். உமது அடியானாகிய நான் உமது அரசருக்குரிய நகரத்தில் உம்முடன் ஏன் வாழவேண்டும்” என்றான்.
அப்பொழுது தாவீதும், அவன் மனிதரும் கேசூரியர், கெஸ்ரியர், அமலேக்கியர் என்பவர்களைச் சூறையாடினார்கள். இவர்கள் பண்டையக் காலத்திலிருந்து, சூர் தொடங்கி எகிப்துவரைக்கும் பரந்து கிடந்த இந்நாட்டில் வாழ்ந்தவர்கள்.
தாவீது ஒரு பகுதியை தாக்கும் போதெல்லாம் ஒரு ஆணையோ, பெண்ணையோ உயிரோடே விடவில்லை. அவர்களுடைய செம்மறியாடுகள், மாடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், உடைகள் அனைத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு ஆகீஸிடம் திரும்பிப் போவான்.
தாவீது ஒரு ஆணையோ, பெண்ணையோ உயிருடன் காத்திற்கு கொண்டுவரவில்லை. ஏனெனில் அவர்கள் தங்களைப் பற்றி ஆகீஸிற்குத் தகவல் கொடுத்து, “இதுவே தாவீது செய்தது” என்று சொல்வார்கள் என நினைத்தான். அவன் பெலிஸ்தியரின் பிரதேசத்தில் வாழ்ந்த காலம் முழுவதும் இவ்வாறாகவே செய்தான்.
ஆகீஸ் தாவீதை நம்பினான். எனவே, “தாவீது தன் சொந்த மக்களான இஸ்ரயேலருக்கு வெறுப்புக்குரியவனாகி விட்டான். இதனால் இவன் என்றென்றும் என் பணியாளனாய் இருப்பான்” என தனக்குள் சொல்லிக்கொண்டான்.