அதைக்கேட்ட தாவீது யெகோவாவிடம், “நான் போய்ப் பெலிஸ்தியரைத் தாக்கட்டுமா?” என்று கேட்டான். அதற்கு யெகோவா தாவீதிடம், “போகலாம். பெலிஸ்தியரைத் தாக்கி கேகிலாவைக் காப்பாற்று” என்றார்.
ஆனால் தாவீதின் மனிதர் அவனிடம், “நாங்கள் இங்கே யூதாவில் இருக்கவே பயப்படுகிறோம். நாம் பெலிஸ்தியரின் படைக்கு எதிராகக் கேகிலாவுக்கு போவதானால் இன்னும் எவ்வளவு பயமாயிருக்கும்” என்றார்கள்.
எனவே தாவீதும் அவனுடைய மனிதரும் கேகிலாவுக்குப் போனார்கள். அங்கே பெலிஸ்தியருடன் யுத்தம்செய்து அவர்களுடைய வளர்ப்பு மிருகங்களை ஓட்டிக்கொண்டு போனார்கள். இவ்விதமாகத் தாவீது பெலிஸ்தியருக்கு அதிக இழப்பை ஏற்படுத்தி கேகிலாவின் மக்களைக் காப்பாற்றினான்.
தாவீது கேகிலாவுக்கு போயிருக்கிறான் என்ற செய்தி சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது அவன், “இறைவன் தாவீதை என் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். ஏனெனில் அவன் வாசல்களும், தாழ்ப்பாள்களும் உள்ள பட்டணத்திற்குள் வந்திருக்கிறபடியால் தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொண்டான்” என்றான்.
அப்பொழுது தாவீது யெகோவாவிடம், “இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவாவே! சவுல் கேகிலா பட்டணத்திற்கு வந்து என் நிமித்தம் அதை அழிக்கத் திட்டமிடுகிறான் என்பதை, உமது அடியவனாகிய நான் நிச்சயமாகக் கேள்விப்பட்டேன்.
மறுபடியும் தாவீது யெகோவாவிடம், “கேகிலாவின் குடிமக்கள் என்னையும் என் மனிதரையும் சவுலிடம் பிடித்துக் கொடுப்பார்களா?” என்று கேட்டான். அதற்கு யெகோவா, “அவர்கள் உன்னை பிடித்துக் கொடுப்பார்கள்” என்றார்.
எனவே தாவீதும் அவனோடிருந்த ஏறக்குறைய அறுநூறு பேரும் கேகிலாவை விட்டுப் புறப்பட்டு ஒவ்வொருவரும் இடம்விட்டு இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். தாவீது கேகிலாவிலிருந்து தப்பி ஓடிவிட்டான் எனச் சவுலுக்கு அறிவிக்கப்பட்டது. எனவே அவன் அங்கு போகவில்லை.
அதன்பின் சீப்பூராரில் சிலர் கிபியாவிலிருந்த சவுலிடம் போய், “தாவீது எஷிமோனுக்குத் தெற்கேயுள்ள ஆகிலா குன்றிலுள்ள கொரேஷின் கோட்டைகளில் எங்கள் மத்தியில் ஒளிந்திருக்கிறான் அல்லவா?
நீங்கள் அங்கேபோய் மேற்கொண்டு ஆயத்தங்களைச் செய்யுங்கள். தாவீது வழக்கமாய் எங்கே போகிறான் என்றும், அங்கே அவனைக் கண்டவர்கள் எவரென்றும் விசாரித்து, யாவற்றையும் அறிவியுங்கள். அவன் மிக தந்திரமுள்ளவன் எனக் கேள்விப்படுகிறேன்.
நீங்கள் அவன் இருக்கும் மறைவிடங்கள் அனைத்தையும் அறிந்து, தெளிவான செய்தியுடன் என்னிடம் வாருங்கள். அப்பொழுது நான் உங்களுடன் வந்து, அந்தப் பகுதியில் அவன் இருந்தால் யூதா வம்சங்கள் எல்லாவற்றின் மத்தியிலும் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பேன்” என்றான்.
சவுல் இதைக் கேள்விப்பட்டபோது தாவீதைத் துரத்திக்கொண்டு மாகோன் பாலைவனத்திற்குப் போனான். சவுல் மலையில் ஒரு பக்கத்தில் போய்க்கொண்டிருந்தான். தாவீதும் அவனுடைய மனிதரும் சவுலிடமிருந்து தப்புவதற்காக மலையின் மறுபக்கத்தில் விரைவாகப் போனார்கள். சவுலும், அவன் படைகளும் தாவீதையும், அவனுடைய மனிதரையும் பிடிக்க நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.
இதைக் கேட்ட சவுல் தாவீதைத் துரத்துவதை விட்டுவிட்டு, பெலிஸ்தியரை எதிர்கொள்ளத் திரும்பிப்போனான். இதனாலேயே அவ்விடத்தை சேலா அம்மாலிகோத் [*அம்மாலிகோத் என்றால் பிரிக்கும் பாறை என்று அர்த்தம்.] என்று அழைக்கிறார்கள்.