English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

1 Samuel Chapters

1 Samuel 23 Verses

1 அதன்பின் மக்கள் தாவீதிடம், “இதோ பெலிஸ்தியர் கேகிலா பட்டணதைத் தாக்கி, அதன் களஞ்சியங்களைக் கொள்ளையடிக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.
2 அதைக்கேட்ட தாவீது யெகோவாவிடம், “நான் போய்ப் பெலிஸ்தியரைத் தாக்கட்டுமா?” என்று கேட்டான். அதற்கு யெகோவா தாவீதிடம், “போகலாம். பெலிஸ்தியரைத் தாக்கி கேகிலாவைக் காப்பாற்று” என்றார்.
3 ஆனால் தாவீதின் மனிதர் அவனிடம், “நாங்கள் இங்கே யூதாவில் இருக்கவே பயப்படுகிறோம். நாம் பெலிஸ்தியரின் படைக்கு எதிராகக் கேகிலாவுக்கு போவதானால் இன்னும் எவ்வளவு பயமாயிருக்கும்” என்றார்கள்.
4 தாவீது மறுபடியும் யெகோவாவிடம் கேட்டான். அப்பொழுது யெகோவா தாவீதிடம், “நீ கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தியரை உன்னிடம் ஒப்படைக்கப் போகிறேன்” என்றார்.
5 எனவே தாவீதும் அவனுடைய மனிதரும் கேகிலாவுக்குப் போனார்கள். அங்கே பெலிஸ்தியருடன் யுத்தம்செய்து அவர்களுடைய வளர்ப்பு மிருகங்களை ஓட்டிக்கொண்டு போனார்கள். இவ்விதமாகத் தாவீது பெலிஸ்தியருக்கு அதிக இழப்பை ஏற்படுத்தி கேகிலாவின் மக்களைக் காப்பாற்றினான்.
6 அகிமெலேக்கின் மகன் அபியத்தார் கேகிலாவிலிருந்த தாவீதிடம் உயிர் தப்பி ஓடியபோது, அவன் ஒரு ஏபோத்தைக் கொண்டு வந்திருந்தான்.
7 தாவீது கேகிலாவுக்கு போயிருக்கிறான் என்ற செய்தி சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது அவன், “இறைவன் தாவீதை என் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். ஏனெனில் அவன் வாசல்களும், தாழ்ப்பாள்களும் உள்ள பட்டணத்திற்குள் வந்திருக்கிறபடியால் தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொண்டான்” என்றான்.
8 அப்பொழுது சவுல், கேகிலாவுக்குப் போய், தாவீதையும் அவன் மனிதரையும் முற்றுகையிடும்படி தன் போர்வீரரை யுத்தத்திற்கு அழைத்தான்.
9 சவுல் தனக்குத் தீங்கு செய்யும்படி திட்டமிடுகிறான் என்பதை அறிந்த தாவீது ஆசாரியனான அபியத்தாரிடம், “ஏபோத்தை இங்கே கொண்டுவா” என்று சொன்னான்.
10 அப்பொழுது தாவீது யெகோவாவிடம், “இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவாவே! சவுல் கேகிலா பட்டணத்திற்கு வந்து என் நிமித்தம் அதை அழிக்கத் திட்டமிடுகிறான் என்பதை, உமது அடியவனாகிய நான் நிச்சயமாகக் கேள்விப்பட்டேன்.
11 கேகிலாவின் குடிமக்கள் சவுலிடம் என்னைப் பிடித்துக் கொடுப்பார்களா? உமது ஊழியன் கேள்விப்பட்டபடி சவுல் வருவானா? இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே! இதை உமது அடியவனுக்குத் தெரிவியும்” என்றான். அதற்கு யெகோவா, “அவன் வருவான்” என்றார்.
12 மறுபடியும் தாவீது யெகோவாவிடம், “கேகிலாவின் குடிமக்கள் என்னையும் என் மனிதரையும் சவுலிடம் பிடித்துக் கொடுப்பார்களா?” என்று கேட்டான். அதற்கு யெகோவா, “அவர்கள் உன்னை பிடித்துக் கொடுப்பார்கள்” என்றார்.
13 எனவே தாவீதும் அவனோடிருந்த ஏறக்குறைய அறுநூறு பேரும் கேகிலாவை விட்டுப் புறப்பட்டு ஒவ்வொருவரும் இடம்விட்டு இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். தாவீது கேகிலாவிலிருந்து தப்பி ஓடிவிட்டான் எனச் சவுலுக்கு அறிவிக்கப்பட்டது. எனவே அவன் அங்கு போகவில்லை.
14 தாவீது காடுகளிலுள்ள கோட்டைகளிலும், சீப் பாலைவனத்திலுள்ள குன்றுகளிலும் தங்கியிருந்தான். சவுல் அவனை அனுதினமும் தேடினான். இறைவனோ தாவீதை அவனின் கைகளில் ஒப்படைக்கவில்லை.
15 தாவீது சீப் பாலைவனத்திலுள்ள கொரேஷில் இருந்தபோது சவுல் தன்னைக் கொல்ல வந்திருக்கிறான் என்பதை அறிந்தான்.
16 அவ்வேளையில் சவுலின் மகனாகிய யோனத்தான் கொரேஷிலிருந்த தாவீதிடம்போய் இறைவனில் பலம்கொள்ளும்படி அவனுக்கு உதவி செய்தான்.
17 யோனத்தான் தாவீதிடம், “பயப்படாதே; என் தகப்பன் சவுல் உன்மேல் கைவைக்க மாட்டார்; நீ இஸ்ரயேலருக்கு அரசனாவாய். நான் உனக்கு இரண்டாவதாய் இருப்பேன். இவையெல்லாம் என் தகப்பனுக்குக்கூட தெரியும்” என்றான்.
18 அவர்கள் இருவரும் யெகோவாவுக்கு முன்பாக ஒரு உடன்படிக்கை செய்தார்கள். யோனத்தான் தன் வீட்டுக்குப் போனான். தாவீதோ கொரேஷிலேயே தங்கினான்.
19 அதன்பின் சீப்பூராரில் சிலர் கிபியாவிலிருந்த சவுலிடம் போய், “தாவீது எஷிமோனுக்குத் தெற்கேயுள்ள ஆகிலா குன்றிலுள்ள கொரேஷின் கோட்டைகளில் எங்கள் மத்தியில் ஒளிந்திருக்கிறான் அல்லவா?
20 இப்பொழுது அரசே, நீர் விரும்பியபோது வாரும்; அவனை அரசனிடம் ஒப்புக்கொடுப்பது எங்கள் பொறுப்பு” என்றார்கள்.
21 அதற்கு சவுல், “நீங்கள் என்மேல் கொண்ட அக்கறைக்கு யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாராக.
22 நீங்கள் அங்கேபோய் மேற்கொண்டு ஆயத்தங்களைச் செய்யுங்கள். தாவீது வழக்கமாய் எங்கே போகிறான் என்றும், அங்கே அவனைக் கண்டவர்கள் எவரென்றும் விசாரித்து, யாவற்றையும் அறிவியுங்கள். அவன் மிக தந்திரமுள்ளவன் எனக் கேள்விப்படுகிறேன்.
23 நீங்கள் அவன் இருக்கும் மறைவிடங்கள் அனைத்தையும் அறிந்து, தெளிவான செய்தியுடன் என்னிடம் வாருங்கள். அப்பொழுது நான் உங்களுடன் வந்து, அந்தப் பகுதியில் அவன் இருந்தால் யூதா வம்சங்கள் எல்லாவற்றின் மத்தியிலும் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பேன்” என்றான்.
24 அப்பொழுது அவர்கள் சவுலுக்கு முன்பாகவே புறப்பட்டு சீப் பட்டணத்துக்குப் போனார்கள். தாவீதும் அவன் மனிதருமோ அந்நேரம் எஷிமோனுக்குத் தெற்காக அரபாவிலுள்ள மாகோன் பாலைவனத்தில் இருந்தார்கள்.
25 சவுலும், அவன் ஆட்களும் தேடுதலை ஆரம்பித்தார்கள். தாவீதுக்கு இது தெரியவந்தபோது, அவன் கற்பாறைக்கு இறங்கி மாகோன் பாலைவனத்தில் தங்கினான்.
26 சவுல் இதைக் கேள்விப்பட்டபோது தாவீதைத் துரத்திக்கொண்டு மாகோன் பாலைவனத்திற்குப் போனான். சவுல் மலையில் ஒரு பக்கத்தில் போய்க்கொண்டிருந்தான். தாவீதும் அவனுடைய மனிதரும் சவுலிடமிருந்து தப்புவதற்காக மலையின் மறுபக்கத்தில் விரைவாகப் போனார்கள். சவுலும், அவன் படைகளும் தாவீதையும், அவனுடைய மனிதரையும் பிடிக்க நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.
27 அப்பொழுது ஒரு தூதுவன் சவுலிடம் வந்து, “பெலிஸ்தியர் உமது நாட்டைச் சூறையாடுகிறார்கள். ஆதலால் விரைவாய் வாரும்” என்று சொன்னான்.
28 இதைக் கேட்ட சவுல் தாவீதைத் துரத்துவதை விட்டுவிட்டு, பெலிஸ்தியரை எதிர்கொள்ளத் திரும்பிப்போனான். இதனாலேயே அவ்விடத்தை சேலா அம்மாலிகோத் [*அம்மாலிகோத் என்றால் பிரிக்கும் பாறை என்று அர்த்தம்.] என்று அழைக்கிறார்கள்.
29 தாவீது அவ்விடத்திலிருந்து புறப்பட்டு என்கேதியிலுள்ள கோட்டைகளில் வசித்தான்.
×

Alert

×