அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் மாவீரன் பெலிஸ்தியரின் முகாமிலிருந்து வெளியே வந்து நின்றான். அவன் ஒன்பது அடிக்கும் அதிகமான உயரமுள்ளவனாய் இருந்தான்.
கோலியாத் இஸ்ரயேலின் போர்ப்படைக்கு முன் வந்துநின்று உரத்த சத்தமாய், “நீங்கள் ஏன் போருக்கு அணிவகுத்து நிற்கிறீர்கள்? நான் பெலிஸ்தியன் அல்லவா? நீங்கள் சவுலின் வேலையாட்கள் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்தெடுத்து என்னிடம் அனுப்புங்கள்.
அவன் என்னோடு போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்கள் அடிமைகளாவோம். நான் அவனோடு போர்செய்து அவனைக் கொன்றால் நீங்கள் எங்கள் அடிமைகளாய் எங்களுக்குப் பணிசெய்வீர்கள்” என்றான்.
பின்னும் அந்தப் பெலிஸ்தியன், “நான் இன்று இஸ்ரயேல் படையைப் போருக்கு வரும்படி அறைகூவல் விடுக்கிறேன். ஒருவனை அனுப்புங்கள். நாங்கள் இருவரும் ஒருவரோடொருவர் சண்டையிடுவோம்” என்றான்.
தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச்சேர்ந்த, எப்பிராத்தியனான ஈசாயின் மகனாயிருந்தான். ஈசாய் என்பவனுக்கு எட்டு மகன்களிருந்தார்கள். அவன் சவுலின் காலத்தில் முதியவனும் வயது சென்றவனுமாயிருந்தான்.
ஈசாயின் மூத்த மகன்கள் மூவரும் யுத்தம் செய்ய சவுலைப் பின்பற்றி சென்றிருந்தார்கள். முதல்பேறானவன் எலியாப், இரண்டாவது மகன் அபினதாப், மூன்றாவது மகன் சம்மா என்பவர்கள் ஆவர்.
ஒரு நாள் ஈசாய் தன் மகன் தாவீதிடம், “இந்த எப்பா அளவு வறுத்த தானியத்தையும், இந்த பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, முகாமிலிருக்கும் உன் சகோதரரிடம் விரைவாகப் போ.
தாவீது அதிகாலையில் எழுந்து மந்தையை ஒரு மேய்ப்பனின் பாதுகாப்பில் விட்டு, ஈசாய் தனக்கு அறிவுறுத்தியபடியே, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனான். படைகள் போர் ஒலி எழுப்பிக்கொண்டு யுத்த நிலைகளுக்கு அணிவகுத்துப் போகையில் அவன் முகாமுக்கு வந்துசேர்ந்தான்.
அவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் அந்த பெலிஸ்திய மாவீரன் தன் அணியிலிருந்து வெளியே வந்து வலிமையான அறைகூவலைச் சொன்னான். தாவீது அதைக் கேட்டான்.
அவ்வேளையில் இஸ்ரயேலர், “இந்த மனிதன் தொடர்ந்து எப்படி வெளியே வருகிறான் என்று பார்த்தீர்களா? அவன் இஸ்ரயேலருக்கு அறைகூவல் விடுக்கவே வருகிறான். இவனைக் கொல்பவனுக்கு அரசன் பெரும் செல்வத்தைக் கொடுப்பான். தன் மகளையும் திருமணம் செய்துகொடுத்து இஸ்ரயேலில் அவனுடைய தகப்பனின் குடும்பத்திற்கு வரிவிலக்கையும் கொடுப்பான்” எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
அதைக்கேட்ட தாவீது அருகில் நின்ற வீரரிடம், “இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரயேலருக்கு நேரிட்ட அவமானத்தை நீக்குபவனுக்கு என்ன செய்யப்படும்? வாழும் இறைவனின் படைகளுக்கு அறைகூவல் விடுப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தியன் யார்?” என்று கேட்டான்.
தாவீது அந்த வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்ததை அவனுடைய மூத்த சகோதரனான எலியாப் கேட்டபோது கோபமடைந்து, “நீ ஏன் இங்கே வந்தாய்? அந்தக் கொஞ்ச செம்மறியாடுகளை காட்டிலே யார் பொறுப்பில் விட்டுவந்தாய்? நீ எவ்வளவு இறுமாப்புடையவன் என்றும், உன் இருதயம் எவ்வளவு கொடுமையானது என்றும் நான் அறிவேன். நீ யுத்தத்தைப் பார்ப்பதற்காகவே இங்கு வந்தாய்” என்றான்.
அதற்கு தாவீது சவுலிடம், “உமது ஊழியன் என் தகப்பனின் செம்மறியாட்டு மந்தையை மேய்ப்பவன். ஒரு சிங்கமோ, கரடியோ வந்து மந்தையிலிலுள்ள ஒரு செம்மறியாட்டைப் பிடித்துக்கொண்டு போகும்போதெல்லாம்,
நான் அவற்றைப் பின்தொடர்ந்து போய் அதை அடித்து அதன் வாய்க்குள் இருந்த செம்மறியாட்டை விடுவித்திருக்கிறேன். அது என்மேல் பாய்ந்தபோதும் அதன் தாடியைப் பிடித்து அடித்துக் கொன்றிருக்கிறேன்.
இவ்வாறு உமது அடியவனாகிய நான் சிங்கத்தையும், கரடியையும் கொன்றிருக்கிறேன். இந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியனும் அவற்றின் ஒன்றைப்போல் எனக்கிருப்பான். ஏனெனில் அவன் வாழும் இறைவனின் படைகளுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறான்” என்றான்.
மேலும் தாவீது, “சிங்கத்தின் பிடியிலிருந்தும், கரடியின் பிடியிலிருந்தும் என்னை விடுவித்த யெகோவா, இந்தப் பெலிஸ்தியனின் கையிலிருந்தும் என்னை விடுவிப்பார்” என்றான். எனவே சவுல், “நீ போ. யெகோவா உன்னோடுகூட இருப்பாராக” என்று தாவீதுக்குச் சொன்னான்.
தாவீதோ சவுலின் வாளைத் தன் யுத்த உடையின்மேல் கட்டிக்கொண்டு, ஆயுதம் தரித்துப் பழக்கமில்லாதபடியால் சுத்தி நடக்க முயன்றான். அதனால் அவன் சவுலிடம், “இவற்றுடன் என்னால் போகமுடியாது. ஏனெனில் எனக்கு இவை பழக்கமில்லை” என்று சொல்லி அவற்றைக் கழற்றினான்.
பின்பு தாவீது கையில் தன் மேய்ப்பனின் கோலை எடுத்துக்கொண்டு நீரோடையிலிருந்த ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து மேய்ப்பருக்குரிய பையில் போட்டு, கவணையும் கையில் பிடித்துக்கொண்டு பெலிஸ்தியனை அணுகினான்.
அதற்குத் தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னை எதிர்த்து வருகிறாய். ஆனால் நானோ, நீ எதிர்த்த இஸ்ரயேல் படைகளின் இறைவனான சேனைகளின் யெகோவாவின் பெயரிலேயே உன்னை எதிர்த்து வருகிறேன்.
இன்று யெகோவா உன்னை என் கையில் ஒப்படைப்பார். நான் உன்னை அடித்து வீழ்த்தி, உன் தலையை வெட்டிப்போடுவேன். இன்று பெலிஸ்திய படைகளின் பிணங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் கொடுப்பேன். இதனால் இஸ்ரயேலில் ஒரு இறைவன் இருக்கிறாரென்பதை முழு உலகமும் அறிந்துகொள்ளும்.
அத்துடன், யெகோவா வாளாலும், ஈட்டியாலும் விடுவிப்பவரல்ல என்பதை இங்கு கூடியிருக்கும் கூட்டமும் அறிந்துகொள்வார்கள். இந்த யுத்தம் யெகோவாவினுடையது. எனவே உங்கள் அனைவரையும் அவர் எங்கள் கைகளில் ஒப்படைப்பார்” என்றான்.
தாவீது தன் பைக்குள் தன் கையை விட்டு ஒரு கல்லை எடுத்து அதை கவணில் வைத்து, அதை வீசி பெலிஸ்தியனின் நெற்றியில் அடித்தான். அந்தக் கல் பெலிஸ்தியனின் நெற்றியில் பதிந்ததால், அவன் முகங்குப்புற நிலத்தில் விழுந்தான்.
இவ்வாறு தாவீது ஒரு கவணினாலும், ஒரு கல்லினாலும் அந்தப் பெலிஸ்தியனை வெற்றிகொண்டான். கையில் வாள் இல்லாமலே தாவீது பெலிஸ்தியனை அடித்து வீழ்த்தி அவனைக் கொன்றான்.
உடனே தாவீது ஓடிப்போய் பெலிஸ்தியனின் மேலாக நின்றான். பெலிஸ்தியனின் வாளை உறையிலிருந்து உருவி எடுத்து, தான் கொன்றவனின் தலையை வெட்டிப்போட்டான். தங்கள் வீரன் இறந்ததைக் கண்ட பெலிஸ்தியர் திரும்பி ஓடினார்கள்.
அப்பொழுது யூதா, இஸ்ரயேல் மனிதர்களும் திரண்டு ஆர்ப்பரித்து அவர்களைத் துரத்திச் சென்றார்கள். இவ்வாறு காத்தின் நுழைவாசல் வரையும், எக்ரோனின் வாசல்கள் வரையும் பெலிஸ்தியரைத் துரத்திச் சென்றார்கள். அவர்களின் இறந்தவர்களின் உடல்கள் சாராயீமின் வழியில் காத், எக்ரோன் மட்டும் பரவிக்கிடந்தன.
தாவீது பெலிஸ்தியனைக் கொன்றபின் திரும்பி வந்தவுடனே அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்து வந்தான். தாவீதின் கையில் இன்னும் பெலிஸ்தியனின் தலை இருந்தது.