English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

1 Samuel Chapters

1 Samuel 15 Verses

1 சாமுயேல் சவுலிடம், “தம் மக்களான இஸ்ரயேலர்மேல் உன்னை அரசனாக அபிஷேகம் பண்ணும்படி யெகோவாவினால் அனுப்பப்பட்டவன் நானே. எனவே இப்பொழுது யெகோவாவிடமிருந்து வந்த செய்தியைக் கேள்.
2 சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அவர்களை அமலேக்கியர் வழிமறித்த செயலுக்காக நான் அவர்களைத் தண்டிக்கப் போகிறேன்.
3 இப்பொழுது நீ போய் அமலேக்கியரைத் தாக்கி அவர்களின் உடைமைகள் அனைத்தையும் முழுவதும் அழித்துவிடு. அவர்களைத் தப்பவிடாதே. ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள், மாடுகள், செம்மறியாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்றுவிடு” என்று சொன்னான்.
4 சவுல் மனிதர்களை அழைப்பித்து தெலாயிமிலே அவர்களைக் கணக்கெடுத்தான். அப்பொழுது இரண்டு இலட்சம் காலாட்படையினரும், யூதாவிலிருந்து பத்தாயிரம் மனிதரும் இருந்தார்கள்.
5 சவுல் அமலேக்கியருடைய பட்டணத்துக்கு வந்து, அவர்களைத் தாக்குவதற்காகக் பள்ளத்தாக்கிலே பதுங்கியிருந்தான்.
6 அப்பொழுது சவுல் கேனியரிடம், “நான் அமலேக்கியருடன் உங்களையும் அழிக்காதபடி, நீங்கள் அவர்களைவிட்டுப் போய்விடுங்கள். ஏனெனில் இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வெளியே வந்தபோது நீங்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டினீர்கள்” என்றான். அதைக் கேட்டவுடன் கேனியர் அமலேக்கியரை விட்டு அப்பால் போய்விட்டார்கள்.
7 பின்பு சவுல் ஆவிலா தொடங்கி எகிப்திற்குக் கிழக்கேயுள்ள சூர் வரைக்கும் இருந்த அமலேக்கியரைத் தாக்கினான்.
8 அத்துடன் அமலேக்கியரின் அரசனான ஆகாகை உயிரோடே பிடித்தான். அங்குள்ள மக்கள் அனைவரையும் வாளால் அழித்தான்.
9 ஆனால் சவுலும், இராணுவப் படையினரும் ஆகாக் அரசனையும், முதற்தரமான செம்மறியாடுகள், ஆடுமாடுகள், கொழுத்த கன்றுக்குட்டிகள், ஆட்டுக்குட்டிகள் ஆகிய தரமான எல்லாவற்றையும் தப்பவிட்டார்கள். அவற்றை முழுவதும் அழிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால் தரமற்றதும், பலவீனமுமானவற்றை முழுவதும் அழித்தார்கள்.
10 அதன்பின் யெகோவாவினுடைய வார்த்தை சாமுயேலுக்கு வந்தது.
11 “சவுலை அரசனாக்கியதை முன்னிட்டு நான் மனம் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னைப் பின்பற்றாமல் என்னைவிட்டு விலகிவிட்டான். என் அறிவுறுத்தல்களை நிறைவேற்றவுமில்லை” என்றார். இது சாமுயேலுக்கு மனவேதனையைக் கொடுத்தது. இதனால் சாமுயேல் அன்றிரவு முழுவதும் யெகோவாவிடம் அழுதான்.
12 மறுநாள் அதிகாலையில் சாமுயேல் எழுந்து சவுலைச் சந்திப்பதற்காகப் போனபோது, அங்குள்ளவர்கள் அவனிடம், “சவுல் கர்மேலுக்குப் போய்விட்டான். அங்கே அவன் தன்னைக் கனம்பண்ணும்படி ஒரு நினைவுச் சின்னத்தை நாட்டிவிட்டு பின் திரும்பி கில்காலுக்குப் போய்விட்டான்” என்றார்கள்.
13 அப்பொழுது சாமுயேல் சவுலிடம் போனபோது, சவுல் சாமுயேலிடம், “யெகோவா உம்மை ஆசீர்வதிப்பாராக. நான் யெகோவாவினுடைய அறிவுறுத்தல்களை நிறைவேற்றிவிட்டேன்” என்றான்.
14 அதற்குச் சாமுயேல் அவனிடம், “அப்படியானால் என் காதுகளில் விழுகின்ற செம்மறியாடுகள் கத்தும் சத்தம் என்ன? நான் கேட்கின்ற ஆடுமாடுகள் கதறும் சத்தம் என்ன?” என்று கேட்டான்.
15 அதற்கு சவுல், “அவற்றை அமலேக்கியரிடமிருந்து இராணுவவீரர்கள் கொண்டுவந்தார்கள். உம்முடைய இறைவனாகிய யெகோவாவுக்கு பலி செலுத்துவதற்காக ஆடு மாடுகளில் சிறந்தவற்றைத் தப்பவிட்டார்கள். மற்றவைகளை நாங்கள் முற்றிலும் அழித்துவிட்டோம்” என்றான்.
16 அப்பொழுது சாமுயேல், “உன் பேச்சை நிறுத்து. நேற்றிரவு யெகோவா எனக்குச் சொன்னவற்றை நான் உனக்குச் சொல்லுகிறேன்” என்றான். அதற்குச் சவுல், “சொல்லும்” என்றான்.
17 எனவே சாமுயேல் சவுலிடம், “நீ உன்னுடைய பார்வையில் சிறியவனாயிருந்தபோதும் நீ இஸ்ரயேல் கோத்திரங்களுக்குத் தலைவனாகவில்லையா? யெகோவாவே உன்னை இஸ்ரயேலருக்கு அரசனாக அபிஷேகம் பண்ணினார்.
18 யெகோவாவே உன்னை, ‘நீ போய்க் கொடியவர்களாகிய அமலேக்கியரை முழுவதும் அழித்துவிடு. அவர்களை முழுவதும் அழிக்கும்வரை அவர்களுடன் யுத்தம் செய்’ என்று உன்னை அனுப்பினார்.
19 ஆனால் நீ ஏன் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. நீ ஏன் அந்த கொள்ளைப்பொருட்களை பாய்ந்து எடுத்து யெகோவாவினுடைய பார்வையில் தீமையானதைச் செய்தாய்?” என்று கேட்டான்.
20 அதற்குச் சவுல் சாமுயேலை நோக்கி, “நான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தேன். யெகோவா செய்யச் சொன்ன பணியைச் செய்து, அமலேக்கியரை முற்றிலும் அழித்து, அவர்கள் அரசனான ஆகாகையும் சிறைபிடித்து வந்தேன்.
21 இராணுவவீரர்களோ இறைவனுக்கு அழிக்கப்பட ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளிலிருந்து சிறந்த செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் உம்முடைய இறைவனாகிய யெகோவாவுக்கு கில்காலிலே பலியிடுவதற்காகவே கொண்டுவந்தார்கள்” என்றான்.
22 அதற்கு சாமுயேல் பதிலாகச் சொன்னதாவது: “யெகோவா தனது குரலுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், தகன காணிக்கைகளிலும் பலிகளிலும் மகிழ்ச்சியடைவாரோ? கீழ்ப்படிதலே, பலி செலுத்துவதிலும் மேலானது; அவருடைய சத்தத்திற்கு செவிகொடுப்பதே, ஆட்டுக்கடாக்களின் கொழுப்பிலும் மேலானது.
23 கலகம் பண்ணுவது, குறிசொல்லும் பாவத்தைப் போன்றது. அகங்காரம், விக்கிரக வழிபாட்டைப்போல் தீமையானது. நீ யெகோவாவின் வார்த்தையைத் தள்ளிவிட்டபடியால், அவரும் நீ அரசனாய் இராதபடி உன்னைப் புறக்கணித்துவிட்டார்.”
24 அப்பொழுது சவுல் சாமுயேலிடம், “நான் பாவம் செய்துவிட்டேன். நான் யெகோவாவினுடைய கட்டளையையும், உம்முடைய அறிவுறுத்தல்களையும் மீறினேன். நான் மக்களுக்குப் பயந்ததினால் அவர்களின் விருப்பத்திற்கு இடங்கொடுத்தேன்.
25 எனவே இப்போது நான் யெகோவாவை வழிபடும்படி என் பாவத்தை மன்னித்து, என்னுடன் திரும்பிவரும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன்” என்று கேட்டான்.
26 அதற்கு சாமுயேல் சவுலிடம், “நான் உன்னோடு திரும்பிவரமாட்டேன். நீ யெகோவாவின் வார்த்தையை புறக்கணித்ததால், நீ இஸ்ரயேல்மீது அரசனாய் இராதபடி யெகோவாவும் உன்னைப் புறக்கணித்துவிட்டார்” என்றான்.
27 பின்பு சாமுயேல் போகும்படி திரும்பவே, சவுல் அவன் மேலாடையின் ஓரத்தைப் பிடித்தபோது, அது கிழிந்து போயிற்று.
28 அப்பொழுது சாமுயேல் சவுலிடம், “இன்றே யெகோவா இஸ்ரயேலின் அரசை உன்னிடமிருந்து கிழித்தெடுத்து, உன் அயலவர்களுக்குள் உன்னிலும் சிறந்த ஒருவனுக்குக் கொடுத்திருக்கிறார்.
29 இஸ்ரயேலின் மகிமையான இறைவன் பொய் சொல்வதுமில்லை, மனம் மாறுவதுமில்லை. ஏனெனில் மனம் மாறுவதற்கு அவர் ஒரு மனிதனல்ல” என்று சொன்னான்.
30 அதற்கு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன். ஆயினும் என் மக்களின் முதியவர் முன்பாகவும், இஸ்ரயேலர் முன்பாகவும் என்னைத் தயவுசெய்து கனம்பண்ணும். நான் உம்முடைய இறைவனாகிய யெகோவாவை வழிபடும்படி என்னோடு திரும்பி வாரும்” என்று கேட்டான்.
31 எனவே சாமுயேல் திரும்பிச் சவுலுடன் சென்றான். சவுல் யெகோவாவை வழிபட்டான்.
32 அதன்பின் சாமுயேல் சவுலிடம், “அமலேக்கியரின் அரசனான ஆகாகை என்னிடம் கொண்டுவா” என்றான். “மரணத்தின் கசப்பு என்னைவிட்டு நீங்கி விட்டது” என்று எண்ணி தைரியத்துடன் ஆகாக் அங்கே வந்தான்.
33 ஆனால் சாமுயேல் அவனிடம், “உன் வாள் பெண்களைப் பிள்ளையற்றவர்கள் ஆக்கிற்று; அப்படியே உன் தாயும் பெண்களுக்குள் பிள்ளையற்றவளாவாள்” என்று சொல்லி சாமுயேல் யெகோவாவுக்கு முன்பாக கில்காலிலே ஆகாகைக் கொன்றான்.
34 பின்பு சாமுயேல் ராமாவுக்கு போனான். சவுல் தன் ஊரான கிபியாவிலுள்ள தன் வீட்டுக்குப் போனான்.
35 சாமுயேல் சவுலுக்காகத் துக்கப்பட்டபோதிலும்கூட, தான் சாகும்வரை திரும்பவும் சவுலைச் சந்திப்பதற்கு போகவில்லை. இஸ்ரயேலருக்குமேல் அரசனாகத் தாம் சவுலை நியமித்ததின் நிமித்தம் யெகோவா மனம் வருந்தினார்.
×

Alert

×