யெகோவா அவனிடம் சொன்னதாவது: “நீ எனக்கு முன்பாகச் செய்த மன்றாட்டையும், விண்ணப்பத்தையும் கேட்டேன். என் பெயர் என்றைக்கும் நிலைக்கும்படியாக நீ கட்டிய இந்த ஆலயத்தை நான் பரிசுத்தப்படுத்தியிருக்கிறேன். என் கண்களும், என் இருதயமும் எப்பொழுதும் அங்கேயிருக்கும்.
“நீயோ உனது தகப்பன் தாவீது செய்ததுபோல் உத்தமத்தோடும், நேர்மையோடும் எனக்கு முன்பாக நடந்து, நான் கட்டளையிட்டவற்றை எல்லாம் செய்து, எனது விதிமுறைகளையும் சட்டங்களையும் கைக்கொள்வாயானால்,
நான் உனது தகப்பன் தாவீதிடம், ‘இஸ்ரயேலின் அரியணையில் உட்கார உனது மகன்களில் ஒருவனாவது ஒருபோதும் இல்லாமல் போகமாட்டான்,’ என்று வாக்குப்பண்ணியபடியே, இஸ்ரயேலில் உனது அரச அரியணையை என்றைக்கும் நிலைநிறுத்துவேன்.
“ஆனால் நீங்களோ உங்கள் சந்ததிகளோ, என்னைவிட்டுத் திரும்பி நான் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளாமல், வேறே தெய்வங்களுக்குப் பணிசெய்து அவைகளை வழிபடும்படி விலகிப்போனால்,
நான் இஸ்ரயேலருக்குக் கொடுத்த நாட்டிலிருந்து அவர்களை அகற்றிவிடுவேன். நான் என் பெயருக்கென்று பரிசுத்தமாக்கிய இந்த ஆலயத்தையும் புறக்கணித்து விடுவேன். அப்பொழுது இஸ்ரயேலர் எல்லா மக்கள் கூட்டங்கள் மத்தியிலும் ஒரு பழிச்சொல்லாகவும், கேலிப்பொருளாகவும் இருப்பார்கள்.
இந்த ஆலயம் அழிவின் குவியலாக [*குவியலாக என்பது சில எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் உன்னதமாய் இருக்கும் என்றுள்ளது.] மாறும். இதைக் கடந்து போகிறவர்கள் இதைக்கண்டு திகைத்து, கேலிபண்ணி, ‘இந்த நாட்டுக்கும் இந்த ஆலயத்துக்கும் யெகோவா ஏன் இப்படி செய்தார்?’ என்பார்கள்.
அப்பொழுது மக்கள், ‘எகிப்திலிருந்து அவர்களுடைய முற்பிதாக்களை மீட்டுக் கொண்டுவந்த அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டார்கள். அவர்கள் வேறே தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றை வழிபட்டு, அவற்றிற்குப் பணிசெய்தார்கள். இதனால்தான் யெகோவா அவர்கள்மீது இந்த பேரழிவைக் கொண்டுவந்தார்’ என்பார்கள்.”
அவன் விரும்பிய அளவு கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும், தங்கத்தையும் தீருவின் அரசனாகிய ஈராம் கொடுத்தபடியினால், சாலொமோன் கலிலேயா நாட்டில் இருபது பட்டணங்களை ஈராமுக்குக் கொடுத்தான்.
அதனால் அவன் சாலொமோனைப் பார்த்து, “என் சகோதரனே இவை என்ன? நீ தந்திருக்கும் பட்டணங்கள் எப்படிப்பட்டவை?” என்று கேட்டான். அதை அவன், “காபூல் [†காபூல் என்றால் பயனற்றது என்று அர்த்தம்.] நாடு” என அழைத்தான். அந்தப் பட்டணங்கள் இன்றுவரை அந்தப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.
அரசன் சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், தன் சொந்த அரண்மனையையும், அதைத் தாங்கும் அடுக்குத் தளங்களையும், எருசலேம் மதிலையும், ஆத்சோர், மெகிதோ, கேசேர் ஆகிய பட்டணங்களையும் கட்டுவதற்கு நியமித்த கட்டாய வேலையின் விபரம் இதுவே:
எகிப்திய அரசனான பார்வோன் படையெடுத்துப்போய் கேசேரைக் கைப்பற்றியிருந்தான். அதை எரித்து, அங்கிருந்த கானானிய குடிமக்களையும் கொலைசெய்தான். பின்பு சாலொமோனின் மனைவியான தன் மகளுக்குத் திருமணப் பரிசாக இதைக் கொடுத்தான்.
அவனுடைய களஞ்சியப் பட்டணங்களையும், தனது தேர்களுக்கும் குதிரைகளுக்குமான பட்டணங்களையும் கட்டினான். அவன் எருசலேமிலும், லெபனோனிலும், தான் அரசாண்ட பிரதேசம் முழுவதிலும் தான் கட்ட ஆசைப்பட்டவற்றைக் கட்டினான்.
இவர்கள் அந்நாட்டில் இஸ்ரயேலர்களால் அழிக்கமுடியாமல் விடப்பட்டிருந்தவர்களின் சந்ததிகள். இன்றுவரை உள்ளபடி அவர்களை சாலொமோன் தனது அடிமைவேலை செய்வதற்குக் கட்டாயமாய்ச் சேர்த்துக்கொண்டான்.
ஆனால் சாலொமோன் இஸ்ரயேலர் எவரையும் அடிமைகளாக்கவில்லை. அவர்கள் அவனுடைய இராணுவவீரர்களாயும், அவனுடைய அரசியல் அதிகாரிகளாகவும், அவனுடைய அலுவலகர்களாகவும், அவனுடைய தலைவர்களாகவும், அவனுடைய தேர்களுக்கும், தேரோட்டிகளுக்கும், தளபதிகளாகவும் இருந்தார்கள்.
இவர்கள் சாலொமோனுடைய வேலைத் திட்டங்களுக்குப் பொறுப்பாய் இருந்த தலைமை அதிகாரிகளாகவும் இருந்தனர். இவர்களில் ஐந்நூற்று ஐம்பது அதிகாரிகள் வேலைசெய்த மனிதர்களை மேற்பார்வை செய்தார்கள்.