{#1ஆலய கட்டிடத்திற்கான ஆயத்தம் } சாலொமோன் தன் தந்தையின் இடத்தில் அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறான் என்று தீருவின் அரசனான ஈராம் கேள்விப்பட்டான். தான் தாவீதுடன் எப்பொழுதும் நட்புறவு கொண்டிருந்தபடியால், தனது தூதுவர்களை அவனிடத்திற்கு அனுப்பியிருந்தான்.
என் தகப்பனாகிய தாவீதுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் யுத்தங்கள் ஏற்பட்டன. அதனால் யெகோவா அவருடைய பகைவர்களை அவரின் காலின்கீழ் அடக்கும் வரைக்கும் தன் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட அவரால் முடியவில்லை என்பது உமக்குத் தெரியும்.
ஆதலால் என் தகப்பனாகிய தாவீதிடம் யெகோவா கூறியபடி, என் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நினைத்திருக்கிறேன். யெகோவா என் தகப்பனிடம், “உன்னுடைய இடத்திலே சிங்காசனத்தில் நான் நியமிக்கும் உன் மகனே என்னுடைய பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்” என்று கூறியிருந்தார்.
“ஆகவே லெபனோனிலுள்ள கேதுரு மரங்களை எனக்காக வெட்டும்படி கட்டளையிடும்; என்னுடைய மனிதரும், உம்முடைய மனிதரோடுகூட வேலை செய்வார்கள். நீர் உமது வேலையாட்களுக்குத் தீர்மானிக்கும் சம்பளம் எவ்வளவு என்றாலும் அதை நான் கொடுப்பேன். சீதோனியரைப்போல காட்டு மரங்களை வெட்டி வீழ்த்துவதற்குரிய திறமையுள்ளவர்கள் எங்களிடம் இல்லை என்பதும் உமக்குத் தெரியும்” என்று கூறி அனுப்பினான்.
சாலொமோனுடைய பதிலைக் கேட்ட ஈராம் மிகவும் சந்தோஷப்பட்டு, “இந்தப் பெரிய இஸ்ரயேல் நாட்டை ஆள்வதற்காக ஒரு ஞானமுள்ள மகனைத் தாவீதுக்குக் கொடுத்த யெகோவாவுக்குத் இன்று துதி உண்டாகட்டும்” என்றான்.
என் மனிதர் லெபனோனிலிருந்து அவைகளைக் கடலுக்கு இழுத்துக்கொண்டு வருவார்கள். அங்கே அவற்றைக் கட்டுமரங்களாகக் கட்டி, மிதக்கப்பண்ணி உமக்குத் தேவைப்பட்ட இடங்களுக்கு அவற்றைக் கடல் வழியாக அனுப்புவேன். அதன்பின் அவற்றை நான் பிரிப்பேன். நீர் அவற்றை எடுத்துச் செல்லலாம். இவற்றைப் பெற்றுக்கொண்டு அவற்றுக்குப் பதிலாக என்னுடைய அரச குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை நீர் அனுப்பி என் விருப்பத்தையும் நிறைவேற்றும்” என்றான்.
சாலொமோன் ஈராமின் வீட்டிற்கு உணவாக 3,600 டன்[* அதாவது, சுமார் 3,600 டன் என்பது எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் 20,000 கோர் என்றுள்ளது. ] கோதுமையைக் கொடுத்தான். அத்துடன் 20,000 குடம் பிழிந்த ஒலிவ எண்ணெயையும் கொடுத்தான். வருடாவருடம் சாலொமோன் இவ்வாறு தொடர்ந்து ஈராமுக்குச் செய்து வந்தான்.
யெகோவா தாம் வாக்குப்பண்ணியபடியே சாலொமோனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். ஈராமுக்கும், சாலொமோனுக்கு இடையில் சமாதான உறவுகள் இருந்ததோடு அவர்கள் இருவரும் ஒரு ஒப்பந்தமும் செய்துகொண்டார்கள்.
ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம்பேரை லெபனோனுக்கு மாறிமாறி அனுப்பினான். இந்த முறையினால் அவர்கள் ஒரு மாதம் லெபனோனிலும், இரண்டு மாதங்கள் வீட்டிலும் இருக்கவேண்டியதாயிருந்தது. இந்தக் கட்டாய வேலைக்கு அதோனிராம் பொறுப்பாக இருந்தான்.