English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

1 Kings Chapters

1 Kings 20 Verses

1 அப்போது சீரிய அரசன் பெனாதாத் தன் முழு இராணுவப் படையையும் ஒன்றுதிரட்டினான். அவன் முப்பத்திரண்டு அரசர்கள், அவர்களுடைய குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுடன் போய், சமாரியாவை முற்றுகையிட்டுத் தாக்கினான்.
2 அவன் பட்டணத்துக்குள்ளே இஸ்ரயேல் அரசனான ஆகாபிடம் சில தூதுவரை அனுப்பி, “பெனாதாத் சொல்வது இதுவே:
3 ‘உன்னுடைய வெள்ளியும், தங்கமும் என்னுடையவை. உன்னுடைய மனைவிகளில் சிறந்தவர்களும் பிள்ளைகளும் என்னுடையவர்கள்’ ” என்றான்.
4 அதற்கு இஸ்ரயேல் அரசன் மறுமொழியாக, “என் தலைவனாகிய அரசனே, உம்முடைய சொற்படி நானும் எனக்குரியவை யாவும் உம்முடையவைகளே” என்று கூறினான்.
5 தூதுவர்கள் திரும்பவும் வந்து, “பெனாதாத் கூறுவதாவது. ‘உன்னுடைய வெள்ளியையும் தங்கத்தையும், மனைவிகளையும் பிள்ளைகளையும் என்னிடம் தரும்படி கட்டளை அனுப்பினேன்.
6 ஆனால் நாளைக்கோ இந்நேரத்தில் உன் அரண்மனையையும், உன் அலுவலர்களுடைய வீடுகளையும் ஆராய்ந்து தேடுவதற்கு என்னுடைய அலுவலர்களை அனுப்புவேன். நீ சிறந்தவையாக மதிக்கும் யாவற்றையும் அவர்கள் கவர்ந்துகொண்டு போவார்கள்’ என்று சொல்கிறான்” என்றார்கள்.
7 அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் நாட்டிலுள்ள முதியவர்களையெல்லாம் அழைப்பித்து அவர்களிடம், “இந்த மனிதன் எப்படிக் கஷ்டத்தைக் கொடுக்கிறான் என்று பாருங்கள். அவன் என் மனைவிகளையும், பிள்ளைகளையும், வெள்ளியையும், தங்கத்தையும் கேட்டு ஆளனுப்பியபோது நான் மறுக்கவில்லை” என்றான்.
8 எல்லா முதியவர்களும் மக்களும் அவனைப் பார்த்து, “அவனுக்குச் செவிகொடுக்கவும் வேண்டாம். அவன் கேட்டவைகளைக் கொடுக்க உடன்படவும் வேண்டாம்” என்றார்கள்.
9 அப்பொழுது அவன் பெனாதாத்தின் தூதுவரைப் பார்த்து, “என் அரசனாகிய தலைவனிடம், ‘நீர் முதல்முறை கேட்ட யாவற்றையும் செய்வேன். ஆனால் இந்த வேண்டுகோளை என்னால் செய்யமுடியாது’ ” என்று சொல்லி அனுப்பினான். அவர்கள் அந்தப் பதிலை பெற்றுக்கொண்டு பெனாதாத்திடம் போனார்கள்.
10 அதற்கு பெனாதாத் ஆகாபிடம், “என் மனிதர் ஒவ்வொருவருக்கும் எடுக்கக்கூடியதாக ஒருபிடி தூசியாவது சமாரியாவில் எஞ்சியிருந்தால், தெய்வங்கள் எவ்வளவு அதிகமாகவும் என்னை தண்டிக்கட்டும்” என்று வேறொரு செய்தியை அனுப்பினான்.
11 இஸ்ரயேல் அரசன் அதற்குப் பதிலாக, “கவசத்தை களைந்தவனைப்போல், அதை அணிந்திருக்கிறவன் தன்னைப் புகழக்கூடாது என்று அவனுக்குச் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினான்.
12 இச்செய்தி வந்தபோது தன் கூடாரத்தில் பெனாதாத் மற்ற அரசர்களோடுகூட குடித்துக்கொண்டிருந்தான். இதைக் கேட்டவுடன் தன் மனிதர்களிடம், “தாக்குவதற்கு ஆயத்தப்படுங்கள்” என்றான். அப்படியே அவர்கள் பட்டணத்தைத் தாக்குவதற்கு ஆயத்தமானார்கள்.
13 இதற்கிடையில் இஸ்ரயேலின் அரசன் ஆகாபிடம் ஒரு இறைவாக்கினன் வந்து, “யெகோவா சொல்வது இதுவே: ‘இந்தப் பெரும் படையைக் காண்கிறாயா? இன்றைக்கே அவர்கள் யாவரையும் உன் கையில் ஒப்புவிப்பேன். அப்பொழுது நான்தான் யெகோவா என்பதை நீ அறிந்துகொள்வாய்’ ” என்றான்.
14 அதற்கு ஆகாப், “இதை யார் செய்வார்?” என்று கேட்டான். அதற்கு இறைவாக்கினன், “யெகோவா சொல்வது இதுவே: ‘உன் மாகாண தளபதிகளில் வாலிப அலுவலர்களே இதைச் செய்வார்கள்’ என்கிறார்” என்றான். “யார் யுத்தத்தைத் தொடங்குவார்?” என்று ஆகாப் கேட்டான். அதற்கு இறைவாக்கினன், “நீ தான்” என்று பதில் கூறினான்.
15 அந்தப்படியே ஆகாப் மாகாண தளபதிகளின் வாலிப அலுவலர்கள் இருநூற்று முப்பத்தி இரண்டுபேரை வரும்படி அழைத்தான். அதன்பின் மிகுதி இஸ்ரயேலரையும் சேர்த்து மொத்தம் ஏழாயிரம் பேரைக் கூடிவரச் செய்தான்.
16 நண்பகல் நேரத்தில் பெனாதாத்தும், அவனுடைய நட்பு அரசர்களான முப்பத்தி இரண்டு அரசர்களும் கூடாரங்களுக்குள் குடிவெறியில் இருக்கும்போது ஆகாபின் படை புறப்பட்டது.
17 முதலில் மாகாண தளபதிகளின் வாலிப அலுவலர்கள் புறப்பட்டார்கள். அப்போது பெனாதாத் அனுப்பிய வேவுக்காரர்கள், “சமாரியாவிலிருந்து படைவீரர் முன்னேறி வருகிறார்கள்” என்று அறிவித்தார்கள்.
18 அதற்கு பெனாதாத், “அவர்கள் சமாதானமாக வந்தாலென்ன, யுத்தத்திற்கு வந்தாலென்ன அவர்களை உயிருடன் பிடியுங்கள்” என்றான்.
19 மாகாண தளபதிகளின் வாலிப அலுவலர்கள் இராணுவம் தம்மைப் பின்தொடரப் பட்டணத்தைவிட்டு வெளியே அணிவகுத்துச் சென்றார்கள்.
20 ஒவ்வொருவனும் தன்னை எதிர்த்து வருபவனைத் தாக்கினான். அவ்வேளையில் சீரியரும் தப்பி ஓடினார்கள். இஸ்ரயேலர் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்தினார்கள். ஆனால் சீரிய அரசனான பெனாதாத் தன் குதிரைவீரர் சிலருடன் குதிரையில் ஏறித் தப்பியோடினான்.
21 இஸ்ரயேல் அரசன் முன்னேறிச் சென்று அவர்களின் குதிரைகளையும், தேர்களையும் மேற்கொண்டு சீரிய இராணுவத்துக்கு பெரும் இழப்பை விளைவித்தான்.
22 இதன்பின்பு இறைவாக்கினன், இஸ்ரயேல் அரசனிடம் வந்து, “உன்னுடைய நிலையை பெலப்படுத்திக்கொள், இனி நீ என்ன செய்யவேண்டுமென்று யோசித்துப்பார். ஏனென்றால் அடுத்த வசந்தகாலத்தில் சீரிய அரசன் உன்னைத் திரும்பவும் தாக்குவான்” என்றான்.
23 இதற்கிடையில் சீரிய அரசனின் அலுவலர்கள் அரசனிடம் வந்து, “அவர்களுடைய தெய்வங்கள் மலைகளின் தெய்வங்கள். அதனால்தான் அவர்களை எங்களால் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் சமபூமியில் அவர்களுடன் சண்டையிட்டால் நிச்சயமாய் அவர்களைவிட பலமுள்ளவர்களாயிருப்போம்.
24 ஆகவே இப்படிச் செய்யும், எல்லா அரசர்களையும், அவர்களுடைய தலைமைப் பதவிகளிலிருந்து விலக்கி, அவர்களுக்குப் பதிலாக அவர்களின் இடங்களில் வேறு அதிகாரிகளை நியமியும்.
25 நாங்கள் சமபூமியில் இஸ்ரயேலருடன் யுத்தம் செய்யும்படியாக, நீர் இழந்த இராணுவத்தைப்போல் குதிரைக்குக் குதிரையும், தேருக்கு தேருமாக ஒரு இராணுவத்தை உருவாக்கும். அப்பொழுது நாங்கள் அவர்களைப்பார்க்கிலும் பலமுள்ளவர்களாயிருப்போம்” என்று ஆலோசனை கொடுத்தார்கள். அரசன் அதற்கு உடன்பட்டு அதன்படியே நடந்தான்.
26 அடுத்த வசந்தகாலத்தில் பெனாதாத் சீரியரைச் சேர்த்துக்கொண்டு இஸ்ரயேலுக்கு எதிராகச் சண்டையிடும்படி ஆப்பெக் வரையும் போனான்.
27 இஸ்ரயேலரும் படை திரட்டிக்கொண்டு உணவுப் பொருட்களுடன் அவர்களை எதிர்க்க அணிவகுத்துச் சென்றனர். இஸ்ரயேலர் அவர்களுக்கெதிரில் இரு சிறிய வெள்ளாட்டு மந்தைகளைப்போல முகாம் அமைத்து இருந்தார்கள். சீரியரோ நாடு முழுவதிலும் நிரம்பியிருந்தார்கள்.
28 இறைவனுடைய மனிதன் இஸ்ரயேல் அரசனிடம் வந்து, “யெகோவா சொல்வது இதுவே: ‘யெகோவாவே மலைகளின் தெய்வம் என்றும், பள்ளத்தாக்கின் தெய்வம் அல்ல என்றும் சீரியா நினைப்பதால் இந்தப் பெரும் படையை உன் கையில் கொடுப்பேன். அதனால் நீயும் நானே யெகோவா என்று அறிந்துகொள்வாய்’ என்கிறார்” என்றான்.
29 ஏழு நாட்களாக இரு படைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமாக முகாம் அமைத்திருந்து, ஏழாம்நாளில் யுத்தத்தைத் தொடங்கினர். இஸ்ரயேலர் ஒரு நாளிலேயே ஒரு இலட்சம் சீரிய காலாட்படை வீரரைக் கொன்றனர்.
30 அவர்களில் மீதியானோர் ஆப்பெக் நகரத்துக்குத் தப்பியோடினர். அங்கே அவர்களில் இருபத்தி ஏழாயிரம்பேர் பட்டண மதில் இடிந்து விழுந்ததினால் அழிந்தார்கள். பெனாதாத் பட்டணத்துக்குள் தப்பியோடி, உள்ளறை ஒன்றில் ஒளித்திருந்தான்.
31 அவனுடைய அதிகாரிகள் அவனைப் பார்த்து, “இஸ்ரயேல் அரசர்கள் மிகவும் இரக்கமுள்ளவர்களென்று கேள்விப்பட்டிருக்கிறோம். நாங்கள் அரையில் துக்கவுடை உடுத்திக்கொண்டு தலையில் கயிறுகளையும் கட்டிக்கொண்டு இஸ்ரயேல் அரசனிடம் போய்ப் பார்ப்போம். சில வேளை அவன் உம்மை உயிரோடு இருக்கவிடுவான்” என்றார்கள்.
32 அவ்வாறே அவர்கள் அரைகளில் துக்கவுடையையும், தலைகளில் கயிறுகளையும் கட்டிக்கொண்டு, இஸ்ரயேல் அரசனிடம் போய், “தயவுசெய்து என்னை உயிருடன் வாழவிடும் என்று உம்முடைய அடியவனாகிய பெனாதாத் கேட்கிறான்” என்றார்கள். அதற்கு அரசன், “அவன் இன்னும் உயிரோடிருக்கிறானா? அவன் என் சகோதரன்” என்றான்.
33 அந்த மனிதர் இதை ஒரு நல்ல அடையாளமாக எண்ணி, அவன் சொன்ன வார்த்தையின்படியே, “ஆம் உம்முடைய சகோதரன் பெனாதாத் உயிரோடிருக்கிறான்” என்றார்கள். அப்பொழுது இஸ்ரயேல் அரசன், “போய் அவனைக் கொண்டுவாருங்கள்” என்றான். பெனாதாத் வெளியே வந்ததும் தனது தேருக்குள் அவனை ஏற்றினான்.
34 பெனாதாத் ஆகாபிடம், “என் தகப்பன் உமது தகப்பனிடமிருந்து கைப்பற்றிய பட்டணங்களெல்லாவற்றையும் நான் உமக்குத் திரும்பத் தருவேன். என் தகப்பன் சமாரியாவில் சந்தைப் பகுதிகளை அமைத்ததுபோல நீரும் தமஸ்குவில் சந்தைப் பகுதிகளை அமைக்கலாம்” என்றான். அதற்கு ஆகாப், “ஒரு ஒப்பந்தத்தின் பெயரில் நான் உன்னைப் போகவிடுகிறேன்” என்றான். எனவே ஆகாப் அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து, அவனைப் போகவிட்டான்.
35 யெகோவாவின் வாக்குப்படி இறைவாக்கினர் குழுவைச் சார்ந்த ஒருவன் தன் தோழனைப் பார்த்து, “உன் ஆயுதத்தால் என்னை அடி” என்றான். அந்த மனிதன் மறுத்துவிட்டான்.
36 அப்பொழுது அந்த இறைவாக்கினன் அவனிடம், “யெகோவாவுக்கு நீ கீழ்ப்படியாமல் போனபடியால் நீ என்னைவிட்டு போனவுடன் ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும்” என்றான். அதேபோலவே அவன் சென்ற உடனேயே ஒரு சிங்கம் எதிரில் வந்து அவனைக் கொன்றுபோட்டது.
37 அப்பொழுது அந்த இறைவாக்கினன் வேறொருவனைப் பார்த்து, “தயவுசெய்து என்னை அடி” என்றான். அப்படியே அவன் அவனை அடித்துக் காயப்படுத்தினான்.
38 அதன்பின்பு அந்த இறைவாக்கினன் அரசனுக்காக வீதியோரமாய் காத்திருந்தான். அவன் தன்னை மாறுவேடத்தில் காண்பிப்பதற்காகத் தன் கண்களுக்கு மேல் ஒரு பட்டியைக் கட்டியிருந்தான்.
39 அரசன் அவ்வழியாய் கடந்துபோனபோது இறைவாக்கினன் அவனிடம் சத்தமிட்டுச் சொன்னதாவது: “நான் ஒரு உக்கிரமான யுத்தத்தின் நடுவே போனபோது, ஒருவன் என்னிடம் ஒரு கைதியுடன் வந்து, ‘இவனைக் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும். இவன் காணாமற்போனால் இவனுடைய உயிருக்காக உன்னுடைய உயிரைக் கொடுக்கவேண்டும் அல்லது நீ ஒரு தாலந்து [*அதாவது, சுமார் 34 கிலோகிராம்] வெள்ளி கொடுக்கவேண்டும்’ என்று சொன்னான்.
40 உமது அடியவனாகிய நான் அங்குமிங்குமாக அவசர வேலையாக இருந்தபோது, அந்தக் கைதி காணாமல் போய்விட்டான்” என்றான். அதற்கு இஸ்ரயேல் அரசன், “அதுதான் உனக்குரிய தீர்ப்பு. உனது வாயினாலேயே தீர்ப்புக் கூறிவிட்டாய்” என்றான்.
41 அப்பொழுது இறைவாக்கினன் விரைவாக தன் கண்களின் மேலிருந்த பட்டையை அவிழ்த்தான். அப்பொழுது இஸ்ரயேல் அரசன் அவன் இறைவாக்கினன் ஒருவன் என்பதை அறிந்துகொண்டான்.
42 இறைவாக்கினன் அரசனைப் பார்த்து, “யெகோவா சொல்வது இதுவே: சாகவேண்டுமென்று நான் தீர்மானித்த ஒருவனை நீ விடுதலையாக்கினாய். ஆகையினால் அவனுடைய உயிருக்காக உன் உயிரும், அவனுடைய மக்களுக்காக உன் மக்களும் சாகவேண்டும்” என்று கூறினான்.
43 இஸ்ரயேல் அரசன் கோபத்துடனும் சலிப்புடனும் சமாரியாவிலுள்ள தன் அரண்மனைக்குப் போனான்.
×

Alert

×