அப்படியே எல்லா இஸ்ரயேலின் வம்சாவழியும், இஸ்ரயேலின் அரசர்களின் பதிவேட்டில் எழுதப்பட்டன. யூதா மக்கள் உண்மையற்றவர்களாய் இருந்தபடியால் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர்.
{#1எருசலேமில் உள்ள மக்கள் } தங்கள் சொந்த இடங்களில் உள்ள தங்கள் சொந்தப் பட்டணங்களுக்குத் திரும்பி வந்தவர்கள் சில இஸ்ரயேலரும், ஆசாரியரும், லேவியரும், ஆலய பணிவிடைக்காரருமே.
குடும்பங்களின் தலைவர்களாயிருந்த ஆசாரியர்கள் 1,760 பேர் இருந்தனர். இவர்கள் இறைவனுடைய ஆலயத்தில் பணிவிடைக்குத் திறமையுடையவர்களும் பொறுப்புடையவர்களுமாய் இருந்தனர்.
கோராகின் மகனாகிய எபியாசாப்புக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவனுடைய சகோதரர்களுமான கோராகியர்கள் பணிவிடை வேலையை விசாரித்தார்கள். அவர்கள் தந்தையர்கள் யெகோவாவின் ஆலய வாசலைக் காவல்செய்வதற்குப் பொறுப்பாயிருந்தது போலவே, கூடாரத்திற்குப் போகிற வழியைக் காவல் காப்பதற்குப் பொறுப்பாயிருந்தனர்.
வாசல்களிலெல்லாம் காவலிருக்க தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் 212 பேர். அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களில் வம்சாவழியின்படியே பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். தாவீதும் தரிசனக்காரனான சாமுயேலும் இவர்களை நம்பிக்கைக்குரிய பதவிகளுக்கு அமர்த்தினர்.
ஆனால் லேவியர்களான நான்கு பிரதான வாசல் காவலர்களிடம் இறைவனின் ஆலயத்தின் பண்டகசாலைகளுக்கும், பொக்கிஷ சாலைகளுக்கும் காவல்காப்பதற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
இறைவனது ஆலயத்தைச் சுற்றிக் காவல் காக்கவேண்டியிருந்ததால் இரவு முழுவதும் அவர்கள் அங்கேயே தங்கவேண்டும். அதோடு ஒவ்வொருநாள் காலையிலும் ஆலயத்தைத் திறக்கும் திறப்புக்கும் அவர்களே பொறுப்பாயிருந்தனர்.
அவர்களில் சிலர் ஆலயத்தின் பணிக்கு பயன்படுத்துவதற்குத் தேவையான பொருட்களுக்குப் பொறுப்பாயிருந்தனர். அவர்கள் பொருட்களை உள்ளே கொண்டுவரும்போதும், வெளியே கொண்டுபோகும் போதும் அவற்றைக் கணக்கிட்டார்கள்.
மற்றவர்கள் பரிசுத்த இடத்தின் பாத்திரங்களையும், மெல்லிய மாவு, திராட்சை இரசம், எண்ணெய், சாம்பிராணி மற்றும் நறுமணப் பொருட்களையும் மேற்பார்வை செய்வதற்கு நியமிக்கப்பட்டார்கள்.