மேலும் தாவீது தனது படைத் தளபதிகளுடன் ஒன்றுசேர்ந்து ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை யாழ், வீணை, கைத்தாளம் ஆகியவற்றை இசைப்பதற்கும், இறைவாக்கு உரைக்கிற பணிக்குமென வேறுபிரித்தான். இந்த பணியைச் செய்த மனிதரின் பெயர் பட்டியல் இதுவே:
எதுத்தூனின் மகன்களில் கெதலியா, செரீ, எஷாயா, சீமேய், அஷாபியா, மத்தத்தியா என்னும் ஆறுபேர் தங்கள் தகப்பன் எதுத்தூனின் மேற்பார்வையின்கீழ் இருந்தனர். இவர்கள் யாழ் மீட்டி நன்றியுடன் யெகோவாவைத் துதித்து இறைவாக்கு உரைத்தனர்.
இவர்கள் எல்லோரும் அரசனின் தரிசனக்காரனான ஏமானின் மகன்கள். இவர்களை இறைவன் தம்மை மகிமைப்படுத்தும்படி, தமது வாக்குத்தத்தத்தின் மூலம் அவனுக்குக் கொடுத்தார். இறைவன் ஏமானுக்கு பதினான்கு மகன்களையும், மூன்று மகள்களையும் கொடுத்தார்.
இவர்கள் எல்லோரும் யெகோவாவினுடைய ஆலயத்தின் இசைக்காகத் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் யாழ், வீணை, கைத்தாளம் போன்ற இசைக்கருவிகளை மீட்பதற்காக இறைவனுடைய ஆலயப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆசாப்பும், எதுத்தூனும், ஏமானும் அரசனின் மேற்பார்வையின்கீழ் இருந்தார்கள்.
இவர்கள் யாவரும் யெகோவாவின் பாடல்களைப் பாடுவதில் பயிற்றுவிக்கப்பட்டவர்களும், திறமைசாலிகளுமாக இருந்தார்கள். தங்கள் உறவினர்களுடன் அவர்கள் இருநூற்று எண்பத்தெட்டுபேராய் இருந்தனர்.
முதலாவது சீட்டு ஆசாபின் வம்சமான யோசேப்பிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கும் விழுந்தது. இரண்டாவது சீட்டு கெதலியாவிற்கும், அவனுடைய மகன்களும் உறவினர்களுமான பன்னிரண்டு பேருக்கு விழுந்தது.