எனவே தாவீது யோவாபிடமும், படைத் தலைவர்களிடமும், “நீங்கள் போய் பெயெர்செபா தொடங்கி தாண்வரை இருக்கும் இஸ்ரயேலரைக் கணக்கிடுங்கள். எத்தனைபேர் அங்கேயிருக்கிறார்கள் என்பதை நான் அறிந்துகொள்வதற்காக எனக்கு அதை அறிவியுங்கள்” என்றான்.
ஆனால் யோவாப் அவனிடம், “யெகோவா தனது இராணுவவீரரை இப்போது இருப்பதைவிட நூறுமடங்காகப் பெருகச்செய்வாராக. என் தலைவனாகிய அரசனே, அவர்கள் எல்லோரும் எனது தலைவரின் குடிமக்கள் அல்லவா? எனது தலைவர் ஏன் இதைச் செய்ய விரும்புகிறீர்? இஸ்ரயேலின்மேல் இந்தக் குற்றப்பழியை ஏன் கொண்டுவருகிறீர்?” என்று பதிலளித்தான்.
அப்பொழுது தாவீது இறைவனிடம், “நான் இதைச் செய்தபடியால் பெரும் பாவம் செய்தேன். இப்பொழுதும் உமது அடியவனின் இந்தக் குற்றத்தை நீக்கிவிடும். நான் மகா புத்தியீனமான செயலைச் செய்தேன்” என மன்றாடினான்.
“நீ போய் தாவீதிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: நான் உனக்கு மூன்று காரியங்களை உனக்குமுன் வைக்கிறேன். நான் உனக்கு எதிராகச் செயல்படுத்தும்படி அவற்றில் ஒன்றைத் தெரிந்துகொள்’ என்று சொல்” என்றார்.
அதாவது, மூன்று வருடங்கள் பஞ்சம் வரும்; அல்லது மூன்று மாதங்கள் எதிரிகளினால் துரத்தப்பட்டு, அவர்களுடைய வாள் உங்களை மேற்கொள்ளும்; அல்லது மூன்று நாட்கள் யெகோவாவின் வாள், கொள்ளைநோயான இது இஸ்ரயேலின் ஒவ்வொரு பகுதியிலும் யெகோவாவின் வாளேந்தும் தூதனால் அழிவாக வரும். எனவே இப்பொழுது என்னை அனுப்பினவருக்கு நான் பதில்சொல்வதற்கு நீ தீர்மானித்துச் சொல்” என்றான்.
தாவீது காத்திடம், “நான் இப்பொழுது பெரிய இக்கட்டில் அகப்பட்டிருக்கிறேன்; யெகோவா மிகவும் இரக்கமுடையவராகையால் நான் அவர் கையில் சரணடைவதையே விரும்புகிறேன். நான் மனிதர் கையில் விழாமல் இருக்கவேண்டும்” என்றான்.
அதோடு எருசலேமையும் அழிப்பதற்கு இறைவன் ஒரு தூதனை அனுப்பினார். ஆனாலும் தூதன் அழிக்கத் தொடங்கினவுடனேயே அவர்களுக்கேற்பட்ட அந்த பேரழிவைக்கண்டு யெகோவா மனதுருகினார். எனவே யெகோவா அழிக்கும் தூதனிடம், “போதும்! உன் கையை எடு” என்று சொன்னார். அப்பொழுது யெகோவாவினுடைய தூதன் எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்தில் நின்றான்.
தாவீது மேலே பார்த்தபோது, யெகோவாவின் தூதன் தனது உருவிய வாளை எருசலேமுக்கு மேலாக நீட்டியபடி, வானத்திற்கும் பூமிக்கும் இடையில் நிற்கக் கண்டான். அப்பொழுது தாவீதும், முதியவர்களும் துக்கவுடை உடுத்தி, யெகோவாவுக்குமுன் தரையில் முகங்குப்புற விழுந்தனர்.
தாவீது இறைவனிடம், “இராணுவவீரரைக் கணக்கிடும்படி கட்டளையிட்டவன் நான் அல்லவா? செய்யத்தகாததைச் செய்து பாவம் செய்தவன் நான்தானே! இந்த ஆடுகள் செய்தது என்ன? என் இறைவனாகிய யெகோவாவே, உம்முடைய கை எனக்கும் என் குடும்பத்திற்கும் விரோதமாய் இருக்கட்டும். இந்தக் கொள்ளைநோய் உமது மக்கள்மேல் இராதபடி செய்யும்” என மன்றாடினான்.
அப்பொழுது யெகோவாவின் தூதன், எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்திற்குப் போய் அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி தாவீதுக்கு சொல் என காத்திற்குக் கட்டளையிட்டார்.
தாவீது ஒர்னானிடம், “கொள்ளைநோய் மக்களைவிட்டு நீங்கும்படியாக, நான் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டுவதற்கு உன்னுடைய சூடடிக்கும் களத்தை கொடு. அதன் முழு விலையையும் நான் உனக்குத் தருகிறேன்” என்றான்.
அதற்கு ஒர்னான் தாவீதிடம், “எனது தலைவனாகிய அரசர் அதை எடுத்து அவரது விருப்பப்படியெல்லாம் செய்வாராக. நான் தகனபலிக்குக் காளையையும், விறகிற்கு மரத்தாலான சூடடிக்கும் உருளைகளையும், தானிய காணிக்கைக்காக கோதுமையையும் தருவேன். இவை எல்லாவற்றையும் நான் தருவேன்” என்றான்.
ஆனால் தாவீது அரசன் ஒர்னானிடம், “அப்படியல்ல, நான் முழு விலையையும் தருவேன். நான் யெகோவாவுக்கு உன்னிடத்திலிருந்து உன்னுடைய எதையும் எடுக்கவோ, நான் செலவு செய்யாமல் ஒரு காணிக்கையைப் பலியிடவோ மாட்டேன்” என்றான்.
அங்கே தாவீது அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதில் யெகோவாவுக்கு தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினான். அவன் யெகோவாவைக் கூப்பிட்டான். அப்போது யெகோவா வானத்திலிருந்து நெருப்பை தகனபலிபீடத்தில் இறங்கப்பண்ணி அவனுக்குப் பதிலளித்தார்.