அதன்பின் தாவீது தனக்கென தாவீதின் நகரத்திலே வீடுகளைக் கட்டினான், அதன்பின் அவன் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கென ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கென ஒரு கூடாரத்தையும் அமைத்தான்.
பின்னர் தாவீது, “லேவியரைத்தவிர வேறு யாரும் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கக்கூடாது. ஏனெனில் யெகோவா தனது உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்காகவும், தனக்கு முன் எப்பொழுதும் பணி செய்தவற்காகவும் அவர்களையே தெரிந்தெடுத்திருக்கிறார்” எனச் சொன்னான்.
அவன் அவர்களிடம், “நீங்கள் லேவிய குடும்பங்களின் தலைவர்கள்; நீங்களும் உங்களுடன் ஒத்த மற்ற லேவியர்களும் உங்களைச் சுத்திகரித்துக்கொண்டு, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை அதற்காக நான் ஆயத்தப்படுத்திய இடத்திற்குக் கொண்டுவாருங்கள்.
முதல்முறை லேவியராகிய நீங்கள் அதைக் கொண்டுவராததினால்தான், எங்கள் இறைவனாகிய யெகோவா தனது கோபத்தை நம்மேல் வரப்பண்ணினார். நாம் முறையான வழியில் எப்படிச் செய்வதென அவரிடம் விசாரியாது போனோம்” என்றான்.
அதன்படியே லேவியர்கள் யோயேலின் மகன் ஏமானையும், தன் சகோதரரிலிருந்து பெரகியாவின் மகன் ஆசாப்பையும், தங்கள் சகோதரரான மெராரியரிலிருந்து குஷாயாவின் மகன் ஏத்தானையும் நியமித்தார்கள்.
லேவியரின் தலைவனாயிருந்த கெனானியா பாடகர்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். அவன் மிகவும் தேர்ச்சி பெற்றவனாயிருந்தபடியினால், அவனுக்கு இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துவந்த லேவியர்களுக்கு இறைவன் உதவியபடியால் அவர்கள் ஏழு காளைகளையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் பலியிட்டனர்.
தாவீதும் பெட்டியைச் சுமக்கும் எல்லா லேவியர்களும், பாடகர்களும், பாடகர் குழுவுக்குப் பொறுப்பான கெனனியாவும் மென்பட்டு மேலங்கியை உடுத்தியிருந்தனர். மெல்லிய நூலினால் நுட்பமாகச் செய்யப்பட்ட உடையை அணிந்திருந்தனர். அதோடு தாவீது நார்பட்டு ஏபோத்தையும் அணிந்திருந்தான்.
இவ்வாறு இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை, கொம்பு வாத்தியங்களையும், எக்காளங்களையும் ஊதிக்கொண்டும், கைத்தாளங்களினால் ஒலி எழுப்பிக்கொண்டும், யாழையும் வீணையையும் மீட்டுக்கொண்டும் மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு கொண்டுவந்தார்கள்.