யெகோவா தன்னை இஸ்ரயேலுக்கு அரசனாக உறுதிப்படுத்தியிருக்கிறார் என்பதையும், தனது மக்களான இஸ்ரயேலுக்காக தனது ஆட்சியை மிகவும் உயர்த்தி மேன்மைப்படுத்தியுள்ளார் என்பதையும் தாவீது அறிந்துகொண்டான்.
தாவீது இஸ்ரயேல் முழுவதற்கும் அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டதை பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது, அவர்கள் அனைவரும் தங்கள் எல்லா படைப்பலத்தோடும் அவனைத் தேடிச்சென்றார்கள். அதைக் கேள்விப்பட்ட தாவீதோ அவர்களை எதிர்கொள்ள அங்கே போனான்.
எனவே தாவீது இறைவனிடம், “நான் பெலிஸ்தியரை எதிர்க்கப் போகலாமா? அவர்களை எனது கையில் ஒப்புக்கொடுப்பீரா?” எனக் கேட்டான். அதற்கு யெகோவா, “போ, அவர்களை நான் உன் கையில் ஒப்படைப்பேன்” எனப் பதிலளித்தார்.
எனவே தாவீதும் அவனுடைய மனிதர்களும் பாகால் பிராசீமுக்குப் போனார்கள். அங்கே தாவீது அவர்களை முறியடித்து, “தண்ணீர் மடை திறந்தோடுவதுபோல, என் கைகளினால் இறைவன் என் பகைவரை முறிந்தோடப்பண்ணினார்” எனச் சொன்னான். எனவே அந்த இடம், பாகால் பிராசீம் என அழைக்கப்பட்டது.
எனவே திரும்பவும் தாவீது இறைவனிடம் விசாரித்து கேட்டபோது இறைவன், “நீ நேரடியாகப் போகாமல் சுற்றிவளைத்து குங்கிலிய மரங்களின் முன்னால் சென்று அவர்களைத் தாக்கு.
குங்கிலிய மரங்களின் உச்சியில் சலசலக்கும் இரைச்சலைக் கேட்டதும் நீ யுத்தத்திற்கு புறப்படு. ஏனெனில் இறைவன் உனக்கு முன்பாக பெலிஸ்திய படையைத் தாக்குவதற்காக போயிருக்கிறார் என்பதே அந்தச் சத்தத்தின் விளக்கம்” என்றார்.