அஸ்கலோன் அதைக் கண்டு பயப்படும், காசாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் புலம்பும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அஸ்கலோன் குடியற்று இருக்கும்.
சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படுவதற்காக அதைச் சுற்றிலும் முகாமிடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
மகளாகிய சீயோனே, மிகவும் மகிழ்ச்சியாயிரு; மகளாகிய எருசலேமே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் பெண் கழுதைக்குட்டியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.
எப்பிராயீமிலிருந்து இரதங்களையும், எருசலேமிலிருந்து குதிரைகளையும் அற்றுப்போகச்செய்வேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் மக்களுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரம் துவங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதுவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் செல்லும்.
நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் மக்களைக் கிரேக்க தேசமக்களுக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்திற்கு ஒப்பாக்குவேன்.
அவர்கள் பக்கம் யெகோவா காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; யெகோவாகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார்.
அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய யெகோவா தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள்.