நீ தேசத்தின் எல்லா மக்களோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருடங்களாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபவாசித்து துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசித்தீர்கள்?
எருசலேமும் அதைச் சுற்றிலும் இருந்த பட்டணங்களும் குடிமக்களால் நிறைந்து சுகமாயிருந்த காலத்திலும், தெற்கு நாடும் சமபூமியும் குடியேறியிருந்த காலத்திலும் முன்னிருந்த தீர்க்கதரிசிகளைக்கொண்டு யெகோவா கூறின வார்த்தைகள் இவைகள் அல்லவோ என்ற சொல் என்றார்.
விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாகத் தன் இருதயத்தில் தீங்கு நினைக்காமலும் இருங்கள் என்றார்.
வேதத்தையும் சேனைகளின் யெகோவா தம்முடைய ஆவியின் மூலமாக முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேட்காதபடிக்குத் தங்கள் இருதயத்தை மிகவும் கடினமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டானது.
ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேட்காமற்போனார்களோ, அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்காமலிருந்தேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
அவர்கள் அறியாத அன்னியமக்களுக்குள்ளே அவர்களைச் சிதறடித்தேன்; அதினால் அவர்கள் பின்வைத்துப்போன தேசம் போக்குவரத்தில்லாமல் பாழாய்ப்போனது; அவர்கள் இன்பமான தேசத்தைப் பாழாய்ப்போகச் செய்தார்கள் என்றார்.