English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Ruth Chapters

Ruth 4 Verses

1 போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்து கொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்த உறவினன் அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓ அண்ணே, என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.
2 அப்பொழுது அவன் பட்டணத்தின் பெரியவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள்.
3 அப்பொழுது அவன் அந்த உறவினனை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள்.
4 ஆகவே, நீர் அதை ஊர் மக்களுக்கு முன்பாகவும், என்னுடைய மக்களின் பெரியவர்களுக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்குத் தெரிவிக்கவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதை உறவுமுறையாக மீட்டுக்கொள்ள விருப்பமாக இருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள விருப்பமில்லாதிருந்தால், நான் அதைத் தெரிந்துகொள்ளும்படி எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கக்கூடியவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
5 அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவனுடைய பெயரை நிலைநிற்கச்செய்யும்படிக்கு, மரித்தவனுடைய மனைவியாகிய மோவாபியப் பெண்ணாகிய ரூத்தைத் திருமணம் செய்யவேண்டும் என்றான்.
6 அப்பொழுது அந்த உறவினன்: நான் என் சுதந்திரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்; நான் மீட்கவேண்டியதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.
7 மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் எல்லாக் காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன்னுடைய காலணியைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழக்கமாக இருந்த உறுதிப்பாடு.
8 அப்படியே அந்த உறவினன் போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன்னுடைய காலணியைக் கழற்றிப்போட்டான்.
9 அப்பொழுது போவாஸ் பெரியவர்களையும் எல்லா மக்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி.
10 இதுவுமல்லாமல், இறந்தவனுடைய சகோதரர்களுக்குள்ளும், ஊரார்களுக்குள்ளும், அவனுடைய பெயர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்திரத்திலே அவனுடைய பெயரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாக இருந்த மோவாபியப் பெண்ணான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி என்றான்.
11 அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற எல்லா மக்களும் பெரியவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன்னுடைய வீட்டிற்கு வருகிற மனைவியைக் யெகோவா இஸ்ரவேல் வீட்டைக் கட்டின இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாக இருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
12 இந்தப் பெண்ணிடம் யெகோவா உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்ததியினாலே, உன்னுடைய வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.
13 போவாஸ் ரூத்தைத் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளுடன் வாழ்ந்தபோது, அவள் கர்ப்பமடைந்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்றெடுக்கக் யெகோவா அருள்செய்தார்.
14 அப்பொழுது பெண்கள் நகோமியைப் பார்த்து: உறவினன் இல்லாமல்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயவுசெய்த யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்; அவனுடைய பெயர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.
15 அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாக இருப்பானாக; உன்னைச் சிநேகித்து, ஏழு மகன்களைப்பார்க்கிலும் உனக்கு அருமையாக இருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றெடுத்தாளே என்றார்கள்.
16 நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.
17 அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பெயரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.
18 பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
19 எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான்.
20 அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.
21 சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான்.
22 ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.
×

Alert

×