மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய முதலாளிக்கே அவன் பொறுப்பாளி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராக இருக்கிறாரே.
அன்றியும், ஒருவன் ஒருநாளைவிட மற்றொரு நாள் சிறந்தது என்று நினைக்கிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சமமாக நினைக்கிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாக இருக்கட்டும்.
நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; எனவே, பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாக இருக்கிறோம்.
இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளி என்று தீர்க்கிறது என்ன? நீ உன் சகோதரனை அற்பமாக நினைக்கிறது என்ன? நாமெல்லோரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.
அப்படியே: “முழங்கால்கள் எல்லாம் எனக்கு முன்பாக முடங்கும், நாக்குகள் எல்லாம் தேவனை அறிக்கைப்பண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன்” என்பதாகக் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.
இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகள் என்று தீர்க்காமல் இருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடையையும் இடறலையும் போடக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
எந்தப்பொருளும் தன்னில்தானே தீட்டானவைகள் இல்லை என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டானது என்று நினைக்கிறவன் எவனோ அவனுக்கு அது தீட்டானதாக இருக்கும்.
இறைச்சி சாப்பிடுவதும், மதுபானம் அருந்துகிறதும், வேறு எதையாவது செய்கிறதும், உன் சகோதரன் இடறுவதற்கோ, தவறுவதற்கோ, பலவீனப்படுகிறதற்கோ காரணமாக இருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமல் இருப்பதே நன்மையாக இருக்கும்.
உனக்கு விசுவாசம் இருந்தால் அது தேவனுக்குமுன்பாக உனக்குள்மட்டும் இருக்கட்டும். நல்லது என்று நிச்சயித்த விஷயத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்.
ஒருவன் சந்தேகத்துடன் சாப்பிட்டால், அவன் விசுவாசம் இல்லாமல் சாப்பிடுகிறதினால், தண்டனைக்குரியவனாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத எதுவும் பாவமே.