பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் இறைச்சியும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும்.
சுத்தமாக இருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, முகாமிற்கு வெளியே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கவேண்டும்; அது இஸ்ரவேல் மக்களின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் தண்ணீருக்கென்று பாதுகாத்து வைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும்.
கிடாரியின் சாம்பலை வாரினவன் தன்னுடைய ஆடைகளைத் துவைக்கவேண்டும்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் மக்களுக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாக இருப்பதாக.
அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தீட்டுக்கழிக்கும் தண்ணீரினால் தன்னைச் சுத்திகரிக்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாவான்; மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தன்னைச் சுத்திகரிக்காமல் இருந்தால் சுத்தமாகமாட்டான்.
செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் யெகோவாவின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இல்லாமல் அழிந்துபோவான்; தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவனுடைய தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும்.
“கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதைச்சேர்ந்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் நுழைகிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாட்கள் தீட்டுப்பட்டிருப்பார்கள்.
ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று தண்ணீர் ஊற்றவேண்டும்.
சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து, அந்த தண்ணீரிலே நனைத்து, கூடாரத்தின்மேலும் அதிலுள்ள எல்லா பணிப்பொருட்களின்மேலும் அங்கேயிருக்கிற மக்களின்மேலும் தெளிக்கிறதும் இல்லாமல், எலும்பையோ வெட்டப்பட்டவனையோ செத்தவனையோ பிரேதக்குழியையோ தொட்டவன்மேலும் தெளிக்கவேண்டும்.
சுத்தமாக இருக்கிறவன் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும்; ஏழாம் நாளில் இவன் தன்னைச் சுத்திகரித்து, தன்னுடைய ஆடைகளைத் தோய்த்து, தண்ணீரில் குளித்து, மாலையிலே சுத்தமாக இருப்பான்.
“தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாமல் இருந்தால், அவன் சபையில் இல்லாதபடி அழிந்துபோவான்; அவன் யெகோவாவின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான்.
தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கும்” என்றார்.