மக்கள் எல்லோரும் தண்ணீர் வாசலுக்கு முன்பாக இருந்த திறந்த வெளியிலே ஒருமனப்பட்டுக் கூடி, யெகோவா இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.
அப்படியே ஏழாம் மாதம் முதல் தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தை ஆண்களும் பெண்களும், கேட்டு அறிந்துகொள்ளக்கூடிய அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து,
தண்ணீர் வாசலுக்கு முன்பாக இருந்த திறந்தவெளிக்கு எதிரே காலைதுவங்கி மதியம்வரை ஆண்களுக்கும் பெண்களுக்கும், கேட்டு அறிந்துகொள்ளக்கூடிய மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; எல்லா மக்களும் நியாயப்பிரமாண புத்தகம் வாசிக்கப்பட்டதை கவனமாகக் கேட்டார்கள்.
அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய யெகோவா வை ஸ்தோத்தரித்தான்; மக்களெல்லோரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென், ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புற விழுந்து, யெகோவாவை தொழுதுகொண்டார்கள்.
மக்கள் எல்லோரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுததால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், மக்களுக்கு விளக்கிக்காட்டின லேவியர்களும் எல்லா மக்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.
பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைச் சாப்பிட்டு, இனிப்பானதைக்குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்கு அவைகளை கொடுங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், துக்கப்படவேண்டாம்; யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.
அப்பொழுது மக்கள் எல்லோரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்ததால், சாப்பிட்டுக் குடிக்கவும், உணவுகளை கொடுக்கவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.
மறுநாளில் மக்களின் எல்லா வம்சத்தலைவர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவிடம் கூடிவந்தார்கள்.
அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே [* பார்க்க லேவி. 23:33-36, 39-43; உபா 16:13-15] , இஸ்ரவேல் மக்கள் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும் என்று யெகோவா மோசேயைக்கொண்டு கற்றுக்கொடுத்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள்.
ஆகையால் எழுதியிருக்கிறமுறையில் கூடாரங்களைப் போட, நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும், பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டுவாருங்கள் என்று தங்களுடைய எல்லா பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரபலப்படுத்தினார்கள்.
அப்படியே மக்கள் வெளியே போய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் வளாகங்களிலும், தேவனுடைய ஆலயவளாகங்களிலும், தண்ணீர்வாசல் வெளியிலும், எப்பிராயீம்வாசல் வெளியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள்.
இவ்விதமாகச் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் சபையார்கள் எல்லோரும் கூடாரங்களைப் போட்டு, கூடாரங்களில் குடியிருந்தார்கள்; இப்படியே நூனின் மகனாகிய யோசுவாவின் நாட்கள்முதல் அந்த நாள்வரை இஸ்ரவேல் மக்கள் செய்யாமலிருந்து இப்பொழுது செய்ததால், மிகுந்த சந்தோஷமுண்டாயிருந்தது.
முதலாம் நாள்துவங்கிக் கடைசி நாள்வரை, தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புத்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளிலோ, முறையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாக இருந்தது.