English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Mark Chapters

Mark 10 Verses

1 இயேசு அந்த இடத்திலிருந்து, யோர்தான் நதிக்கு அக்கரையில் உள்ள தேசத்தின்வழியாக யூதேயாவின் எல்லைகளில் வந்தார். மக்கள் மீண்டும் அவரிடம் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மீண்டும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.
2 அப்பொழுது பரிசேயர்கள், அவரைச் சோதிக்கவேண்டும் என்று, அவரிடம் வந்து: கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது நியாயமா? என்று கேட்டார்கள்.
3 அவர் மறுமொழியாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார்.
4 அதற்கு அவர்கள் விவாகரத்திற்குரிய விடுதலைப்பத்திரத்தை எழுதிக்கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதி கொடுத்திருக்கிறார் என்றார்கள்.
5 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுடைய இருதயக் கடினத்தினாலே இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.
6 ஆனாலும், ஆரம்பத்திலே மனிதர்களைப் படைத்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
7 இதனால் கணவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்;
8 அவர்கள் இருவர்களும் ஒரே மாம்சமாக இருப்பார்கள்; இவ்விதமாக அவர்கள் இருவர்களாக இல்லாமல் ஒரே மாம்சமாக இருக்கிறார்கள்.
9 எனவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார்.
10 பின்பு வீட்டில் இருக்கும்போது அவருடைய சீடர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மீண்டும் அவரிடம் விசாரித்தார்கள்.
11 அப்பொழுது அவர்: யாராவது தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.
12 மனைவியும் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு, வேறொருவனை திருமணம்செய்தால், விபசாரம் செய்கிறவளாக இருப்பாள் என்றார்.
13 அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடுவதற்காக அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள்.
14 இயேசு அதைப் பார்த்து கோபப்பட்டு: சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடம்கொடுங்கள்; அவர்களைத் தடைப்பண்ணவேண்டாம்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
15 யாராவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
16 அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். நித்தியஜீவனை சுதந்தரிப்பது எப்படி?
17 பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.
18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வது எதினால்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை.
19 விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, திருடாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, ஏமாற்றாதே, உன் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணு என்கிற கட்டளைகளைப்பற்றி தெரிந்திருக்கிறாயே என்றார்.
20 அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறிய வயதிலிருந்து கடைபிடித்து வருகிறேன் என்றான்.
21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடம் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளை எல்லாவற்றையும் விற்று, ஏழைகளுக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.
22 அவனுக்கு அதிக சொத்துக்கள் இருந்ததால், இந்த வார்த்தையைக் கேட்டு, சோர்ந்து, துக்கத்தோடு போய்விட்டான்.
23 அப்பொழுது இயேசு சுற்றிலும்பார்த்து, தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றார்.
24 சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, செல்வத்தின்மேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது!
25 செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.
26 அவர்கள் அதிகமாக ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படமுடியும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
27 இயேசு அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாது, தேவனால் இது முடியும்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.
28 அப்பொழுது பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றிவந்தோமே, என்று சொல்லத்தொடங்கினான்.
29 அதற்கு இயேசு மறுமொழியாக: எனக்காகவும், நற்செய்திப் பணிக்காகவும், வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, குழந்தைகளையாவது, நிலங்களையாவது விட்டு வந்தவன் எவனும்,
30 இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
31 ஆனாலும் முந்தினவர்கள் அநேகர் பிந்தினவர்களாகவும், பிந்தினவர்கள் அநேகர் முந்தினவர்களாகவும் இருப்பார்கள் என்றார்.
32 பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்பொழுது, இயேசு அவர்களுக்கு முன்பே நடந்துபோனார்; அவர்கள் ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னால் பயத்தோடு போனார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, தமக்கு நடக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மீண்டும் சொல்லத்தொடங்கினார்:
33 இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து, யூதரல்லாதோர்களிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.
34 அவர்கள் அவரைப் பரிகாசம்பண்ணி, அவரை சாட்டையினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
35 அப்பொழுது செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அவரிடம் வந்து: போதகரே, நாங்கள் எதைக்கேட்டாலும் அதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்கள்.
36 அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
37 அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள்.
38 இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்பது என்ன என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் முடியுமா என்றார்.
39 அதற்கு அவர்கள்: முடியும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.
40 ஆனாலும் என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி யாருக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களைத்தவிர, மற்றவர்களுக்கு அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
41 மற்ற பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின்மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்.
42 அப்பொழுது, இயேசு அவர்களை அருகில் வரச்சொல்லி: யூதரல்லாதவர்களுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களை ஆணவத்தோடு ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
43 உங்களுக்குள்ளே அப்படி இருக்கக்கூடாது; உங்களில் யாராவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாக இருக்கவேண்டும்.
44 உங்களில் யாராவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் எல்லோருக்கும் ஊழியக்காரனாக இருக்கவேண்டும்.
45 அப்படியே, மனிதகுமாரனும் மற்றவர்களிடம் ஊழியம் பெற வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
46 பின்பு அவர்கள் எரிகோவிற்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீடர்களும் மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் பார்வையற்ற மகனாகிய பர்திமேயு, வழியருகில் உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
47 அவன் நசரேயனாகிய இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டு கூப்பிடத் தொடங்கினான்.
48 அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான்.
49 இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தப் பார்வையற்றவனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.
50 உடனே அவன் தன் மேலாடையை கழற்றிவிட்டு, எழுந்து, இயேசுவிடம் வந்தான்.
51 இயேசு அவனைப் பார்த்து: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறாய் என்றார். அதற்கு அந்தப் பார்வையற்றவன்: ஆண்டவரே, நான் பார்வைபெறவேண்டும் என்றான்.
52 இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வைபெற்று, வழியிலே இயேசுவைப் பின்பற்றி அவர்பின்னே சென்றான்.
×

Alert

×