அப்பொழுது அவர் ஒரு படகில் ஏறினார், அது சீமோனுடைய படகாக இருந்தது; அதைக் கரையிலிருந்து கொஞ்சம் தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படகில் உட்கார்ந்து, மக்களுக்குப் போதகம்பண்ணினார்.
அதற்குச் சீமோன்: ஐயா, இரவு முழுவதும் நாங்கள் முயற்சிசெய்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; இருப்பினும் உம்முடைய வார்த்தையின்படி நான் வலைகளைப் போடுகிறேன் என்றான்.
அப்பொழுது மற்றப் படகில் இருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படகுகளும் அமிழ்ந்துபோகும் அளவிற்கு நிரப்பினார்கள்.
சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இனி நீ மனிதர்களைப் பிடிக்கிறவனாக இருப்பாய் என்றார்.
பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கும்போது, குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனிதன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புறவிழுந்து: ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைச் சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
அவர் அவனை நோக்கி: நீ இதை யாருக்கும் உடனே சொல்லாமல், நீ எருசலேமுக்குப்போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார்.
அப்படியிருந்தும் அவரைப்பற்றிய செய்தி அதிகமாகப் பரவியது. அநேக மக்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்களுடைய நோய்கள் நீங்கி சுகமடைவதற்கும் கூடிவந்தார்கள்.
பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள எல்லா கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் உட்கார்ந்திருந்தார்கள்; நோயாளிகளைக் குணமாக்கத்தக்க கர்த்தருடைய வல்லமை அவரிடம் இருந்தது.
அப்பொழுது சில மனிதர்கள் பக்கவாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடு எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவருக்கு முன்பாக வைக்கவும் முயற்சித்தார்கள்.
மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோக முடியாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள்வழியாக மக்களின் மத்தியில் இயேசுவிற்கு முன்பாக அவனைப் படுக்கையோடு இறக்கினார்கள்.
பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இவைகளுக்குப் பின்பு அவர் புறப்பட்டு, வரி வசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிவசூலிக்கும் ஒருவனைக் கண்டு: என்னைப் பின்பற்றிவா என்றார்.
வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவருடைய சீடர்களுக்கு எதிராக முறுமுறுத்து: நீங்கள் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உட்கார்ந்து சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் ஏன்? என்று கேட்டார்கள்.
பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீடர்கள் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம் செய்துவருகிறார்கள், பரிசேயர்களுடைய சீடர்களும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீடர்கள் சாப்பிடவும் குடிக்கவும் செய்கிறார்களே, அது எப்படி என்று கேட்டார்கள்.
அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு வைத்து இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய ஆடை பழைய ஆடைக்குப் பொருத்தமாக இருக்காது.
ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால் புதிய திராட்சைரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், திராட்சைரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்.