English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Leviticus Chapters

Leviticus 22 Verses

1 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
2 “இஸ்ரவேல் மக்கள் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தப் பொருட்களைக்குறித்து ஆரோனும் அவனுடைய மகன்களும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்; நான் யெகோவா.
3 அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளிலுள்ள சந்ததியாரில் யாராவது தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகள் அருகில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இல்லாதபடி அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் யெகோவா.
4 ஆரோனின் சந்ததியாரில் எவன் தொழுநோயாளியோ, எவன் விந்து கழிதல் உள்ளவனோ, அவன் சுத்தமாகும்வரை பரிசுத்தமானவைகளில் சாப்பிடக்கூடாது; பிணத்தினாலே தீட்டானவைகளில் எதையாகிலும் தொட்டவனும், விந்து கழிந்தவனும்,
5 தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும் பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்,
6 மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தண்ணீரில் குளிக்கும்வரை பரிசுத்தமானவைகளில் சாப்பிடக்கூடாது.
7 சூரியன் மறைந்தபின்பு சுத்தமாக இருப்பான்; அதன்பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் சாப்பிடலாம்; அது அவனுடைய ஆகாரம்.
8 தானாகச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் சாப்பிடுகிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாது; நான் யெகோவா.
9 ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதன் காரணமாக மரணமடையாமலிருக்க, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா.
10 “அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் சாப்பிடக்கூடாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலை செய்கிறவனும் பரிசுத்தமானதில் சாப்பிடக்கூடாது.
11 ஆசாரியனால் பணத்திற்கு வாங்கப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்தவனும் அவனுடைய ஆகாரத்தில் சாப்பிடலாம்.
12 ஆசாரியனுடைய மகள் அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே சாப்பிடக்கூடாது.
13 விதவையான, அல்லது விவாகரத்து செய்யப்பட்டவளான ஆசாரியனுடைய மகள் பிள்ளை இல்லாதிருந்து, தன் தகப்பனுடைய வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோல திரும்பவந்து இருந்தாளென்றால், அவள் தன் தகப்பனுடைய ஆகாரத்தில் சாப்பிடலாம்; அந்நியனாகிய ஒருவனும் அதில் சாப்பிடக்கூடாது.
14 “ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் சாப்பிட்டிருந்தால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாக சேர்த்து பரிசுத்தமானவைகளுடன் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.
15 அவர்கள் யெகோவாவுக்குப் படைக்கிற இஸ்ரவேல் மக்களுடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும்,
16 அவைகளைச் சாப்பிடுகிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரச்செய்யாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா என்று சொல்” என்றார்.
17 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
18 “நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் யெகோவாவுக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ,
19 அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக.
20 ஊனமுள்ள ஒன்றையும் செலுத்தவேண்டாம்; அது உங்கள்நிமித்தம் அங்கீகரிக்கப்படுவதில்லை.
21 ஒருவன் விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாகமாயாவது, யெகோவாவுக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கீகரிக்கப்படும்படி, ஒரு ஊனமில்லாமல் உத்தமமாக இருக்கவேண்டும்.
22 குருடு, எலும்பு முறிந்தவை, முடம், கட்டிகள் உள்ளவை, சொறி, புண் முதலிய குறைபாடு உள்ளவைகளை நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தாமலும், அவைகளாலே யெகோவாவுக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.
23 நீண்ட அல்லது குறுகின உறுப்புள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக செலுத்தலாம்; பொருத்தனைக்காக அது அங்கீகரிக்கப்படமாட்டாது.
24 விதை நசுங்கினதையும், நொறுங்கினதையும், காயப்பட்டதையும், விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்தில் பலியிடாமலும் இருப்பீர்களாக.
25 அந்நியர்களின் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தவேண்டாம்; அவைகளின் குறைபாடும், ஊனமும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கீகரிக்கப்படுவதில்லை என்று சொல்” என்றார்.
26 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
27 “ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது, வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாட்கள் தன் தாயினிடத்தில் இருப்பதாக; எட்டாம் நாள் முதல் அது யெகோவாவுக்குத் தகனபலியாக அங்கீகரிக்கப்படும்.
28 பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரே நாளில் கொல்லவேண்டாம்.
29 யெகோவாவுக்கு நன்றிபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாக அதைச் செலுத்துவீர்களாக.
30 அந்நாளிலேயே அதைச் சாப்பிட்டுவிடவேண்டும்; விடியற்காலம்வரை நீங்கள் அதில் ஒன்றையும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் யெகோவா.
31 “நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் யெகோவா.
32 என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமல் இருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் மக்கள் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா.
33 நான் உங்களுக்கு தேவனாக இருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தேன்; நான் யெகோவா என்று சொல்” என்றார்.
×

Alert

×