Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Leviticus Chapters

Leviticus 14 Verses

1 {தொழுநோயாளியின் சுத்திகரிப்பு} [PS] பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
2 “தொழுநோயாளியினுடைய சுத்திகரிப்பின் நாட்களில் அவனுக்குரிய விதிமுறைகள் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும்.
3 ஆசாரியன் முகாமிற்கு வெளியே போய்; அவனுடைய தொழுநோய் சுகமாகிவிட்டது என்று கண்டால்,
4 சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டளையிடுவானாக.
5 பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பானையிலுள்ள சுத்தமான தண்ணீரின்மேல் கொல்லச்சொல்லி,
6 உயிருள்ள குருவியையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் சுத்தமான தண்ணீரின்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே நனைத்து,
7 தொழுநோய் நீங்கச் சுத்திரிக்கப்படுகிறவன்மேல் ஏழுமுறை தெளித்து, அவனைச் சுத்தம்செய்து, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடுவானாக.
8 சுத்திகரிக்கப்படுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தன் முடி முழுவதையும் சிரைத்து, தான் சுத்தமாவதற்காக தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்கு வந்து, தன் கூடாரத்திற்கு வெளியே ஏழுநாட்கள் தங்கி,
9 ஏழாம் நாளிலே தன் தலையையும், தாடியையும், புருவங்களையும் தன்னுடைய முடிமுழுவதையும் சிரைத்து, தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருப்பான்.
10 “எட்டாம்நாளிலே அவன் பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், ஒருவயதுடைய பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், உணவுபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஒரு ஆழாக்கு எண்ணெயையும் கொண்டுவரக்கடவன்.
11 சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அப்பொருட்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்.
12 பின்பு, ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி,
13 பாவநிவாரணபலியும் சர்வாங்கதகனபலியும் செலுத்தும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.
14 அந்த குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசுவானாக.
15 பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் ஊற்றி
16 தன் இடதுகையிலுள்ள எண்ணெயில் தன் வலதுகையின் விரலை நனைத்து, தன் விரலினால் ஏழுமுறை அந்த எண்ணெயில் எடுத்து, யெகோவாவுடைய சந்நிதியில் தெளித்து,
17 தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயிலே கொஞ்சம் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும், ஏற்கனவே பூசியிருக்கிற குற்றநிவாரணபலியினுடைய இரத்தத்தின்மேல் பூசி,
18 தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய தலையிலே ஊற்றி யெகோவாவுடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
19 ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்கதகனபலியைக் கொன்று,
20 சர்வாங்கதகனபலியையும் உணவுபலியையும் பலிபீடத்தின்மேல் வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் சுத்தமாக இருப்பான்.
21 “அவன் இவ்விதம் செய்யமுடியாத ஏழையாக இருந்தால், அவன் தன் பாவநிவிர்த்திக்கென்று அசைவாட்டும் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்குட்டியையும், உணவுபலிக்கு எண்ணெயில் பிசைந்த ஒரு மரக்கால் மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கையும், ஆழாக்கு எண்ணெயையும்,
22 தன் தகுதிக்குத் தக்கபடி இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்று பாவநிவாரணபலியாகவும், மற்றொன்று சர்வாங்கதகனபலியாகவும் செலுத்தும்படி வாங்கி,
23 தான் சுத்திகரிக்கப்படும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவருவானாக.
24 அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் உணவுபலியாக அசைவாட்டி,
25 குற்றநிவாரணபலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி,
26 அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் ஊற்றி
27 தன் இடதுகையிலுள்ள எண்ணெயிலே தன் வலதுவிரலை நனைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுமுறை தெளித்து,
28 தன் உள்ளங்கையில் இருக்கிற எண்ணெயில் கொஞ்சம் எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் குற்றநிவாரணபலியின் இரத்தம் பூசியிருக்கிற இடத்தின்மேல் பூசி,
29 தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,
30 பின்பு, அவன் தன் பெலத்திற்கும் தகுதிக்கும் தக்கதாக காட்டுப்புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவந்து,
31 அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, உணவுபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
32 தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கமுடியாத தொழுநோயாளியைக் குறித்த விதிமுறைகள் இதுவே என்றார். [PS]
33 {பூசணம்பிடித்த வீட்டிற்கான சட்டம்} [PS] பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
34 “நான் உங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் சொந்தமான தேசத்தில் ஒரு வீட்டிலே பூசணத்தை நான் வரச்செய்தால்,
35 அந்த வீட்டிற்குச் சொந்தமானவன் வந்து, வீட்டிலே பூசணம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.
36 அப்பொழுது வீட்டிலுள்ள அனைத்தும் தீட்டுப்படாதபடி, ஆசாரியன் அந்தப் பூசணத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை காலிசெய்துவைக்கச் சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய்,
37 அந்தப் பூசணம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்ற சுவரைவிட பள்ளமாக இருக்கக்கண்டால்,
38 ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
39 ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப்பார்த்து, பூசணம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால்,
40 பூசணம் இருக்கும் அந்த இடத்தின் கற்களைப் பெயர்க்கவும், பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,
41 வீட்டின் உட்புறம் சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும்,
42 வேறே கற்களை எடுத்துவந்து, அந்தக் கற்களுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.
43 “கற்களைப் பெயர்த்து, வீட்டைச்செதுக்கி, புதிதாகப் பூசினபின்பும், அந்தப் பூசணம் மீண்டும் வீட்டில் வந்ததானால்,
44 ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன்; பூசணம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற பூசணம்; அது தீட்டாயிருக்கும்.
45 ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கற்களையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும்.
46 வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
47 அந்த வீட்டிலே உறங்கியவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்.
48 “ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தப் பூசணம் படரவில்லை என்று கண்டானேயாகில், பூசணம் நீங்கிவிட்டதால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்மானிக்கக்கடவன்.
49 அப்பொழுது வீட்டைச் சுத்திகரிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து,
50 ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று,
51 கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் நனைத்து, வீட்டின்மேல் ஏழுமுறை தெளித்து,
52 குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டைச் சுத்திகரித்து,
53 உயிருள்ள குருவியைப் பட்டணத்திற்கு வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாக இருக்கும்”.
54 இது சகலவித தொழுநோய்க்கும், சொறிக்கும்,
55 உடைப் பூசணத்திற்கும், வீட்டுப்பூசணத்திற்கும்,
56 தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் உரிய விதிமுறை.
57 தொழுநோய் மற்றும் பூசணம், எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்கு தொழுநோய்க்குரிய விதிமுறைகள் இதுவே என்றார். [PE]
×

Alert

×