ஐயோ, ஆண்டவர் தமது கோபத்தில் மகளாகிய சீயோனை கரும்மேகத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினைக்காமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமியிலே விழச்செய்தார்.
அவர் தமது கடுங்கோபத்திலே இஸ்ரவேலின் வல்லமை முழுவதையும் வெட்டிப்போட்டார்; விரோதிகளுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதை எரித்துப்போடுகிற நெருப்புத்தழலைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார்.
என் மகளாகிய எனது மக்களின் பாடுகளினிமித்தம் கண்ணீர் விடுகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் உருகி தரையிலே வடிகிறது; குழந்தைகளும் சிறுபிள்ளைகளும் நகரத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கிறார்கள்.
அவர்கள் காயப்பட்டவர்களைப்போல பட்டணத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கும்போதும், தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் உயிரை விடும்போதும், தங்கள் தாய்களை நோக்கி: தானியமும் திராட்சைரசமும் எங்கே என்கிறார்கள்.
வழிப்போக்கர்கள் அனைவரும் உன்னைப்பார்த்துக் கை கொட்டுகிறார்கள்; மகளாகிய எருசலேமைப்பார்த்து விசிலடித்து, கேலியாக தங்கள் தலைகளை அசைத்து: பூரணவடிவும் உலகத்தின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.
உன்னுடைய பகைவர்கள் எல்லோரும் உன்னைப்பார்த்துத் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; பரியாசம் செய்து பல்லைக் கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.
யெகோவா தாம் நினைத்ததைச் செய்தார்; ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைவன் மகிழ்ச்சியடையச் செய்தார்; உன் எதிரிகளின் கொம்பை உயர்த்தினார்.
எழுந்திரு, இரவிலே முதல் ஜாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மயங்கியிருக்கிற உன் குழந்தைகளின் உயிருக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.
பண்டிகைநாளில் மக்கள் கூட்டத்தை வரவழைப்பதுபோல் சுற்றிலுமிருந்து எனக்கு பயத்தை வரவழைத்தீர்; யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை; நான் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை என் பகைவன் அழித்தான்.