நீ கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெறுவாய்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படவேண்டாம்; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் [* எண்ணாகமம் 6 அதிகாரத்தை பார்க்க] ; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றத் தொடங்குவான் என்றார்.
அப்பொழுது அந்தப் பெண் தன்னுடைய கணவனிடம் வந்து: தேவனுடைய மனிதன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாக இருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.
அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; ஆதலால் நீ திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காமலும், தீட்டானது ஒன்றும் சாப்பிடாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன்னுடைய மரணநாள்வரை தேவனுக்கென்று நசரேயனாக இருப்பான் என்று சொன்னார் என்றாள்.
அப்பொழுது மனோவா யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: ஆ, என்னுடைய ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனிதன் மறுபடியும் ஒருமுறை எங்களிடம் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்.
தேவன் மனோவாவின் சத்தத்திற்குச் செவிகொடுத்தார்; அந்தப் பெண் வயல்வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் கணவனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை.
அப்பொழுது மனோவா எழுந்து, தன்னுடைய மனைவியின் பின்னாலே போய், அவரிடத்திற்கு வந்து: இந்தப் பெண்ணோடு பேசியவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான்தான் என்றார்.
யெகோவாவுடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன்னுடைய உணவை சாப்பிடமாட்டேன்; நீ சர்வாங்க தகனபலி செலுத்தவேண்டுமானால், அதை நீ யெகோவாவுக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் யெகோவாவுடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.
அதற்கு அவன் மனைவி: யெகோவா நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்கதகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.