நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: உள்நோக்கம் இல்லாமல் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போய் தங்குவதற்காக; நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் வாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பர்களின் காதுகளில் கேட்கும்படி, தன்னுடைய காரியத்தைச் சொல்வான்; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடம் பட்டணத்திற்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடு குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கவேண்டும்.
பழிவாங்குகிறவன் அவனைப் பின்தொடர்ந்துவந்தால், அவன் அவனை முன்விரோதம் இல்லாமல் அறியாமல் கொன்றதினால், அவனை இவனுடைய கையில் ஒப்புக்கொடுக்காமல் இருக்கவேண்டும்.
நியாயம் விசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்த நாட்களில் இருக்கிற பிரதான ஆசாரியன் மரணமடையும்வரைக்கும், அவன் அந்தப் பட்டணத்திலே குடியிருக்கவேண்டும்; பின்பு கொலைசெய்தவன் தான் விட்டுவந்த தன்னுடைய பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திரும்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார்.
அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் உள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.
உள்நோக்கம் இல்லாமல் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும்வரைக்கும் பழிவாங்குகிறவனுடைய கையினால் சாகாதபடி ஓடிப்போய் ஒதுங்குவதற்கு இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற அந்நியர்களுக்கும் குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே.