அப்பொழுது யோனா யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போவதற்கா எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப்போகிற ஒரு கப்பலைக்கண்டு, கட்டணம் செலுத்தி, தான் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகும்படி, அவர்களோடு தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
அப்பொழுது கப்பற்காரர்கள் பயந்து, அவனவன் தன்தன் தெய்வங்களை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தைக் குறைப்பதற்காக கப்பலில் இருந்த சரக்குகளைக் கடலில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோ கப்பலின் கீழ்த்தளத்தில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, ஆழ்ந்து தூங்கினான்.
அப்பொழுது மாலுமி அவனிடம் வந்து: நீ தூங்கிக் கொண்டிருக்கிறது என்ன? எழுந்திருந்து உன்னுடைய தெய்வத்தை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாமலிருக்க உன்னுடைய தெய்வம் ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.
அவர்கள் யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நாம் தெரிந்துகொள்ள சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பெயருக்குச் சீட்டு விழுந்தது.
அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யாரால் இந்த ஆபத்து நமக்கு வந்ததென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழில் என்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.
அவன் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனிதர்கள் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.
பின்னும் கடல் அதிகமாகக் கொந்தளித்துக்கொண்டிருந்ததால், அவர்கள் அவனை நோக்கி: கடல் நமக்காக அமைதியாகும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்து கடலிலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது கடல் அமைதியாக இருக்கும்; என்னால்தான் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.