பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மெரொதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் வெட்கமடைந்தது; அதினுடைய சிலைகள் நொறுங்கிப்போயின என்று மக்களுக்குள்ளே அறிவித்துப் பிரபலப்படுத்துங்கள்; இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம்செய்யுங்கள்.
அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் மக்கள் வருவார்கள்; அவர்களும் யூதா மக்களும் ஏகமாக அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய யெகோவாவை தேடுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
மறக்கமுடியாத நிலையான உடன்படிக்கையினால் நாம் யெகோவாவைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராக முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிறவழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்.
என் மக்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறச்செய்து, மலைகளில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து அடுத்த மலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள்.
அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லோரும் அவர்களைத் தாக்கினார்கள்; அவர்களுடைய எதிரிகள்: எங்கள்மேல் குற்றமில்லை; அவர்கள் நீதி தங்குமிடத்தில் யெகோவாவுக்கு விரோதமாக, தங்கள் முற்பிதாக்கள் நம்பின யெகோவாவுக்கு விரோதமாகவே, பாவம் செய்தார்கள் என்றார்கள்.
இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாக வடதேசத்தில் இருக்கும் பெரிய மக்கள் கூட்டத்தை எழுப்பி, அதை வரச்செய்வேன்; அவர்கள் அதற்கு விரோதமாக ஆயத்தம்செய்வார்கள்; அங்கேயிருந்து வருகிறவர்களால் அது பிடிக்கப்படும்; அவர்களுடைய அம்புகள் சாமர்த்தியமுள்ள பராக்கிரமசாலியின் அம்புகளைப்போல் இருக்கும்; அவைகள் வீணாகத் திரும்புவதில்லை.
தெரிந்தக்கொண்ட என் ஜனத்தை கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே. புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலிமையான எருதுகளைப்போல முழக்கம் போடுகிறீர்களே.
அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரியுங்கள்; அது தன்னைக் கையளித்தது; அதின் அஸ்திபாரங்கள் விழுந்தது, அதின் மதில்கள் இடிக்கப்பட்டது; இது யெகோவா வாங்கும் பழி; அதினிடத்தில் பழிவாங்குங்கள்; அது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள்.
இஸ்ரவேல் சிதறடிக்கப்பட்ட ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.
அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடைக்காதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
கடையாந்தரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து, அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.
பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் முகாமிடுங்கள்; ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் செயலுக்குத்தக்கபலனை அதற்குச் சரிக்கட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய யெகோவாவுக்கு விரோதமாக இடும்பு செய்தது.
இதோ, இடும்புள்ளவனே, நான் உனக்கு விரோதமாக வருகிறேன் என்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன்னுடைய நாள் வந்தது.
பெருமையுள்ளவன் இடறிவிழுவான்; அவனை எடுத்து நிறுத்துவாரில்லை; நான் அவனுடைய பட்டணங்களில் நெருப்பைக் கொளுத்துவேன், அது அவன் சுற்றுப்புறத்தார் எல்லோரையும் பட்சிக்கும்.
சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களும் யூதா மக்களும் ஏகமாக ஒடுக்கப்பட்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின அனைவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள்.
அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர், சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர்; தேசத்தை இளைப்பாறச்செய்வதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கச்செய்வதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார்.
பட்டயம் அதின் குதிரைகள்மேலும், அதின் இரதங்கள்மேலும், அதின் நடுவில் இருக்கிற பலதேசத்தின் மக்கள் அனைவர்மேலும் வரும், அவர்கள் தைரியமற்றவர்களாவார்கள்; பட்டயம் அதின் பொக்கிஷங்களின்மேல் வரும், அவைகள் கொள்ளையாகும்.
ஆகையால் காட்டுமிருகங்களும் நரிகளும் அதில் குடியிருக்கும்; தீக்கோழிகள் அதில் தங்கும்; இனி என்றென்றைக்கும் அது குடியேற்றப்படுவதில்லை; தலைமுறை தலைமுறையாக ஒருவரும் அதில் குடியிருப்பதுமில்லை.
தேவன் சோதோமையும் கொமோராவையும் அதின் சுற்றுப்புறங்களையும் கவிழ்த்துப்போட்டதுபோல இதையும் கவிழ்த்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; ஒருவரும் அதில் குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதில் தங்குவதுமில்லை.
அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியவர்கள்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் மகளே, அவர்கள் உனக்கு விரோதமாக போருக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின்மேல் ஏறி வருவார்கள்.
அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்கு உண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும்.