எஸ்போனைக்குறித்து மோவாபுக்கு இருந்த பெருமை இனி இருக்காது; அது ஒரு தேசமாக இராமல் அதை அழிப்போம் வாருங்களென்று அதற்கு விரோதமாகப் பொல்லாப்பை நினைத்திருக்கிறார்கள்; மத்மேனே, நீயும் அழிக்கப்படுவாய்; பட்டயம் உன்னைத் தொடரும்.
நீ உன் சம்பத்தையும் உன் பொக்கிஷங்களையும் நம்புகிறதினால் நீயும் பிடிக்கப்படுவாய், அப்பொழுது கேமோஷ் சிறையாக்கப்பட்டுப்போகும்; அதின் ஆசாரியர்களும் பிரபுக்களும் எல்லோரும் சிறைப்பட்டுப்போவார்கள்.
பாழாக்குகிறவன் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை; பள்ளத்தாக்குகளும் கெட்டுப்போகும்; சமனான பூமியும் அழிக்கப்படும் என்று யெகோவா சொன்னார்.
மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாக வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் ஊற்றப்படாமலும், அதின் வண்டல்களின்மேல் அசையாமலும் இருந்தது; அது சிறையிருப்புக்குப் போனதில்லை; ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது; அதின் வாசனை மாறவில்லை.
ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது கவிழ்த்துப்போடுகிறவர்களை அதற்கு அனுப்புவேன்; அவர்கள் அதைக் கவிழ்த்து, அதின் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதின் ஜாடிகளை உடைத்துப்போடுவார்கள்.
அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் புகழை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் அதற்காக அங்கலாய்த்துக்கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.
தீபோன் பட்டணவாசியான மகளே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்துடன் உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் மதில்களை அழித்துப்போடுவான்.
அவன் அதிக பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் தற்பெருமையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன்.
சீப்மாவூரின் திராட்சைச்செடியே, யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன்; உன் கொடிகள் கடலைக் கடந்துபோனது; அவைகள் யாசேர் கடல்வரை போய் எட்டின; பாழாக்குகிறவன் உன் வசந்தகாலத்துப் பழங்களின்மேலும், உன் திராட்சைப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான்.
எஸ்போன் துவங்கி எலெயாலெ, யாகாஸ்வரைக்கும் உண்டாகும் கூக்குரலினிமித்தம் அவர்கள் மூன்றுவயதுக் கடாரியைப்போல், சோவார்துவக்கி ஒரொனாயிம்வரை சத்தமிடுவார்கள்; நிம்ரீமின் தண்ணீர்களும் வற்றிப்போகும்.
ஆகையால், மோவாபினிமித்தம் என் இருதயம் நாதசுரம்போல் துயரமாய் தொனிக்கும்; கீராரேஸ் மனிதருக்காகவும், என் இருதயம் நாதசுரம்போல் துயரமாய் தொனிக்கும்; அவர்கள் சம்பாதித்த ஐசுவரியம் அழிந்துபோகிறதினால் அப்படித் தொனிக்கும்.
மோவாப் எவ்வளவாக முறிந்துபோனதென்று அலறுகிறார்கள்; அது முதுகைக்காட்டி எவ்வளவாய் வெட்கப்படும்? இப்படி மோவாப் தன் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் பரியாசமும் திகைப்புமாயிருக்கும்.
மோவாபே, உனக்கு ஐயோ, கேமோஷ் சிலைக்கு அருகிலுள்ள மக்கள் அழிவார்கள், உன் மகன்களும் சிறைபிடிக்கப்படுகிறார்கள், உன் மகள்களும் சிறைபிடிக்கப்பட்டுப்போகிறார்கள்.
ஆனாலும் வரும் நாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்துடன் முடிந்தது.