இஸ்ரவேல், நீ திரும்புகிறதற்கு மனமிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று யெகோவா சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையிலிருந்து அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை.
யூதா மனிதர்களே, எருசலேமின் குடிமக்களே, உங்கள் செயல்களுடைய பொல்லாப்பினால் என் கடுங்கோபம் நெருப்பைப்போல எழும்பி, அணைப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் யெகோவாவாக்கென்று உங்களை . முற்றிலுமாய் அர்ப்பணியுங்கள்.
தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கச்செய்யுங்கள்; நாம் பாதுகாப்பான பட்டணங்களுக்கு வந்துசேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்.
உன் தேசத்தைப் பாழாக்கிவிடுவதற்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, தேசங்களை அழிக்கிறவன் தன் இடத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.
அப்பொழுது நான்: ஆ! யெகோவாவாகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், உண்மையாகவே இந்த மக்களுக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரச்செய்தீர்; பட்டயம் ஜீவன்வரை எட்டுகிறதே என்றேன்.
வனாந்திரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் மக்களாகிய மகளுக்கு நேராக வீசும் என்று அக்காலத்தில் இந்த மக்களுடனும் எருசலேமுடனும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது.
இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போல் இருக்கிறது; அவனுடைய குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ, நாம் பாழாக்கப்படுகிறோமே.
தேசங்களுக்கு அதை நீங்கள் பிரபலப்படுத்துங்கள்; இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்த சத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள்.
என் குடல்கள், என் குடல்களே வலிக்கிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமைதலாக இருக்கமுடியாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், போரின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.
என் மக்களோ அறிவில்லாதவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போகும்; நான் அதைச் சொன்னேன், அதைத் தீர்மானம்செய்தேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.
குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினால் எல்லா ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனிதனும் அவைகளில் குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்.
பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் அணிந்தாலும், பொன் ஆபரணங்களால் உன்னை அலங்கரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; ஆசைநாயகர்கள் உன்னை அசட்டைசெய்து, உன் உயிரை வாங்கத் தேடுவார்கள்.