உங்களுடன் போர்செய்கிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் தோற்கடித்தாலும், மீந்தவர்கள் எல்லோரும் காயம்பட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை நெருப்பினால் சுட்டெரிப்பார்கள் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்.
அவன் பென்யமீன் வாசலில் வந்தபோது, காவற்காரர்களின் அதிபதியாகிய யெரியா என்னும் பெயருள்ள ஒருவன் அங்கே இருந்தான்; அவன் அனனியாவின் மகனாகிய செலேமியாவின் மகன்; அவன்: நீ கல்தேயரைச் சேரப்போகிறவன் என்றுசொல்லி, எரேமியா தீர்க்கதரிசியைப் பிடித்தான்.
அப்பொழுது எரேமியா: அது பொய், நான் கல்தேயரைச் சேரப்போகிறவனல்ல என்றான்; ஆனாலும் யெரியா எரேமியாவின் சொல்லைக் கேளாமல், அவனைப் பிடித்து, பிரபுக்களிடத்தில் கொண்டுபோனான்.
அப்பொழுது பிரபுக்கள்: எரேமியாவின்மேல் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, அவனைக் காரியதரிசியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்; அவர்கள் அதைக் காவற்கூடமாக்கியிருந்தார்கள்.
பின்பு சிதேக்கியா ராஜா அவனை வரவழைத்து: யெகோவாவால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டில் இரகசியமாகக் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான்.
பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டில் அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த மக்களுக்கும் விரோதமாக என்ன குற்றம்செய்தேன்?
இப்போதும் ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குக் காதுகொடுத்து, என் விண்ணப்பத்திற்குத் தயைசெய்து, என்னைக் காரியதரிசியாகிய யோனத்தானுடைய வீட்டிற்குத் திரும்ப அனுப்பவேண்டாம்; அனுப்பினால் நான் அங்கே செத்துப்போவேன் என்றான்.
அப்பொழுது எரேமியாவைக் காவல்நிலையத்தின் முற்றத்தில் காக்கவும், நகரத்தில் அப்பம் இருக்குவரை அப்பம் சுடுகிறவர்களின் வீதியில் தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக்கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவல்நிலையத்தின் முற்றத்தில் இருந்தான்.