யெகோவா சொல்கிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் இடம் எப்படிப்பட்டது?
என்னுடைய கரம் இவைகளையெல்லாம் படைத்ததினால் இவைகளெல்லாம் உண்டானது என்று யெகோவா சொல்கிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
நான் கூப்பிட்டும் மறுமொழி கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினால், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரச்செய்வேன்.
இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்திற்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு தேசம் ஒரே சமயத்தில் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒரே சமயத்தில் வேதனைப்பட்டும், தன் மகன்களைப் பெற்றும் இருக்கிறது.
பெறச்செய்கிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று யெகோவா சொல்கிறார்; பிரசவிக்கச்செய்கிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்கிறார்.
நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது யெகோவாவுடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய எதிரிகளிடத்தில் அவருடைய கோபமும் தெரியவரும்.
நான் அவர்களுடைய செயல்களையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் எல்லா தேசத்தாரையும் பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களையுங் ஒன்றாகச் சேர்க்கும்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்.
நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் புகழ்ச்சியைக் கேளாமலும், என் மகிமையைக் காணாமலுமிருக்கிற மக்களின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும், வில்வீரர்கள் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை தேசங்களுக்குள்ளே அறிவிப்பார்கள்.
இஸ்ரவேல் மக்கள் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரர் எல்லோரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், சரக்கு வண்டிகளின்மேலும், கோவேறு கழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல தேசங்களிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள யெகோவாவுக்குக் காணிக்கையாக என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவருவார்கள் என்று யெகோவா சொல்கிறார்.
அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாகப் பாதகம்செய்த மனிதர்களுடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய நெருப்பு அணையாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான அனைவருக்கும் அருவருப்பாயிருப்பார்கள்.