சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லோரும் ஒன்றாகக்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் மகன்கள் தூரத்திலிருந்து வந்து, உன் மகள்கள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.
அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் பக்கமாகத் திரும்பும், தேசங்களின் பலத்த படை உன்னிடத்திற்கு வரும்.
தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களுடன் அவர்கள் பொன்னையும், அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய யெகோவாவின் நாமத்துக்கென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும், தூரத்திலிருந்துகொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும்.
அந்நியமக்கள் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு மனமிரங்கினேன்.
உன்னிடத்திற்கு தேசங்களின் பலத்த படையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும் பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.
உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைசெய்த அனைவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் யெகோவாவுடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.
நீ வெறுக்கப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.
நான் வெண்கலத்திற்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரச்செய்து, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரர்களை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.
இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களைப் பாதுகாப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்வாய்.
உன் மக்கள் அனைவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும் குடிமக்களும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் செயல்களுமாயிருப்பார்கள்.