பாபிலோனின் கன்னிப்பெண்ணாகிய மகளே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் மகளே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ கர்வமுள்ளவள் என்றும் சுகசெல்வி என்றும் இனி அழைக்கப்படுவதில்லை.
நான் என் மக்களின்மேல் கடுங்கோபமடைந்து, என் சொந்தமானதைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வைக்காமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி,
இப்பொழுதும் சுகசெல்வியே, கவலையில்லாமல் வாழ்கிறவளே: நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லை; நான் விதவையாவதில்லை, நான் சந்ததி சேதத்தை அறிவதில்லையென்று உன் இருதயத்திலே சொல்கிறவளே, நான் சொல்கிறதைக் கேள்.
சந்ததி சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரே நாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான மந்திரவித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாக உன்மேல் வரும்.
உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத் தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்.
ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று உனக்குத் தெரியாது; உனக்குத் துன்பம் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்கு உடனடியாக உண்டாகும் அழிவு உன்மேல் வரும்.
நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் மாயவித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ பயன்படுத்து; அவைகளால் உனக்குப் பயனோ, பலனோ உண்டாகுமா என்று பார்ப்போம்.
இதோ, அவர்கள் பதரைப்போல் இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் உயிரை நெருப்புத்தழலினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல.
உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்செய்தாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள்; அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை காப்பாற்றுவார் இல்லை.