அக்காலத்திலே யெகோவா லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, மிக பெரியதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.
கோபம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாக போரில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை எல்லாம் கொளுத்திவிடுவேன்;
தேவரீர் இஸ்ரவேல் மக்களைத் துரத்திவிடும்போது குறைவாக அதனுடன் வழக்காடுகிறீர் ; கொண்டல் காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்.
ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நீக்கப்படும்; தோப்புஉருவங்களும், சிலைகளும் இனி நிற்காமல் அவர்கள் பலிபீடங்களின் கற்களையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கற்களாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் நீக்கிவிடுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.
பாதுகாப்பான நகரம் வெட்டாந்தரையாகும், அந்த குடியிருப்பு தள்ளுண்டு வனாந்திரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும்.
அதின் கிளைகள் உலரும்போது ஒடிந்துபோகும்; பெண்கள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள மக்களல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும், அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபை செய்யாமலும் இருப்பார்.