அப்பொழுது, மக்களுக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும் வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும் எல்லோருக்கும் சரியாக நடக்கும்.
ஒலிவமரத்தை உலுக்கும்போதும், திராட்சைப்பழங்களை அறுத்துத் முடியும்போதும், பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதுபோல, தேசத்திற்குள்ளும் இந்த மக்களின் நடுவிலும் கொஞ்சம் மீந்திருக்கும்.
நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன், இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ, துரோகிகள் துரோகம் செய்கிறார்கள்; துரோகிகள் மிகுதியாகத் துரோகம்செய்கிறார்கள் என்கிறேன்.
அப்பொழுது பயத்தின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறக்கப்பட்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்.
வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிசையைப்போலப் பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருப்பதினால், அது விழுந்துபோகும், இனி எழுந்திருக்காது.
அப்பொழுது சேனைகளின் யெகோவா சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் வெட்கப்படும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக தம்முடைய மகிமை வெளிப்படுத்துவார்.