பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், வாரிசானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாக இருந்தும், அவன் சிறுபிள்ளையாக இருக்கும் காலம்வரைக்கும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசம் இல்லை.
இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலன் இல்லாததும் வெறுமையானதுமான அந்த வழிபாடுகளுக்கு நீங்கள் மீண்டும் திரும்பி, மீண்டும் அவைகளுக்கு அடிமைகளாவதற்கு விரும்புகிறது ஏன்?
அப்படி இருந்தும், என் சரீரத்தில் இருக்கிற பெலவீனம் உங்களுக்கு சோதனையாக இருந்தாலும் நீங்கள் என்னை வெறுக்காமலும், தள்ளிவிடாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும் ஏற்றுக்கொண்டீர்கள்.
அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்தபாக்கியம் எங்கே? உங்களுடைய கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கமுடியும் என்றால், அதையும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறேன்.
அவர்கள் வைராக்கியத்தோடு உங்களைத் தேடுகிறார்கள்; ஆனாலும் நல்லமனதோடு அப்படிச் செய்யாமல், நீங்கள் என்னைவிட்டுவிட்டு, அவர்களை வைராக்கியத்தோடு பின்பற்றவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இவைகள் ஞான அர்த்தம் உள்ளவைகள்; அந்த இரண்டு பெண்களும் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையில் உண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகக் குழந்தைப் பெறுகிறது, அது ஆகார் என்பவள் தானே.
ஆகார் என்பது அரபிதேசத்தில் உள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுது இருக்கிற எருசலேமுக்கு அடையாளம்; ஏனென்றால், இவள் தன் பிள்ளைகளோடு அடிமைப்பட்டிருக்கிறாளே.
அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, மகிழ்ச்சியாக எழும்பி ஆர்ப்பரி; கணவன் உள்ளவளைவிட மலடியான பெண்ணுக்கே அதிக பிள்ளைகள் உண்டு என்று எழுதியிருக்கிறது.
அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுதந்திரமுள்ளவளுடைய மகனோடு வாரிசாக இருப்பதில்லை; ஆகவே, அடிமையானவளையும், அவளுடைய மகனையும் வெளியே தள்ளு என்று சொல்லுகிறது.