அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமின் ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்திற்குரிய பொன் வெள்ளிப் பொருட்கள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்களுடைய இடத்திற்குப் போய்சேருவதற்குத் திரும்பக் கொடுக்கவேண்டும்; அவைகளை தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுபோங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
தேவனுடைய ஆலயத்தை யூத மூப்பர்கள் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்கு செய்யத்தக்கதாக, நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதர்களுக்குத் தடை ஏற்படாமலிருக்க, நதிக்கு மறுபுறத்தில் வாங்கப்படும் வரியை ராஜாவின் பணத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் ஆகும் செலவைக் கொடுக்கவேண்டும்.
பரலோகத்தின் தேவனுக்கு சர்வாங்க தகனபலிகளை செலுத்தத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சைரசம், எண்ணெய் ஆகியவை அனுதினம் அவர்கள் கேட்கிற விதத்தில் குறையில்லாமல் கொடுக்கவேண்டும்.
எருசலேமில் இருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்கு சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவருடைய மகன்களுக்கும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுதல் செய்ய இப்படிச் செய்யவேண்டும்.
பின்னும் நம்மால் பிறக்கும் கட்டளை என்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவனுடைய வீட்டிலிருந்து ஒரு நீண்ட கல் பிடுங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடப்படவும், அதினால் அவனுடைய வீடு குப்பைமேடாவதாக.
ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும், அனைத்து மக்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கச் செய்த தேவன் அழிப்பாராக; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதன்படி ஜாக்கிரதையாக செய்யவேண்டும் என்று எழுதியனுப்பினான்.
அப்பொழுது நதிக்கு இந்தப்புறத்திலிருக்கிற ஆளுனராகிய தத்னாயும், சேத்தார் பொஸ்னாயும், அவர்களின் கூட்டாளிகளும், தரியு ராஜா கட்டளையிட்ட பிரகாரம் ஜாக்கிரதையாக செய்தார்கள்.
மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியர்களை அவர்களுடைய பிரிவுகளின்படியும், லேவியர்களை அவர்கள் முறைவரிசைகளின்படியும் நிறுத்தினார்கள்.
ஆசாரியர்களும் லேவியர்களும் ஒருமனப்பட்டுத் தங்களை சுத்தம் செய்துகொண்டதால், எல்லோரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லோருக்காகவும், ஆசாரியர்களான தங்களுடைய சகோதரர்களுக்காகவும், தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்.
அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் மக்களும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தைவிட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைச் சாப்பிட்டு,