அவர்கள் அந்த தேசத்தின் மக்களுக்கு பயந்ததால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்களுடைய யெகோவாவுக்கு காலை மாலை சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.
அதற்குப்பின்பு அனுதினமும், மாதப்பிறப்புகளிலும், யெகோவாவுடைய அனைத்து பரிசுத்த பண்டிகைகளிலும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும், யெகோவாவுக்கு அவரவர் செலுத்தும் உற்சாகபலியையும் செலுத்தினார்கள்.
அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதத்திலே, செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும், மற்றும் அவர்களுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களும் லேவியர்களும், சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பம்செய்து, இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்களைக் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.
யெகோவா நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கும்போது, மாறிமாறிப் பாடினார்கள்; யெகோவாவை துதிக்கும்போது, மக்கள் எல்லோரும் யெகோவாவுடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுவதினால் மகா கெம்பீரமாக ஆர்ப்பரித்தார்கள்.
மக்கள் மகா கெம்பீரமாக ஆர்ப்பரிக்கிறதினால் அவர்களுடைய சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், மக்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறிய முடியாதிருந்தது.