அந்த மக்களில் மீதியாயிருக்கிறவன் எந்த இடத்தில் தங்கியிருக்கிறானோ, அந்த இடத்தின் மக்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாகக் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமல்லாமல், அவனுக்குப் பொன், வெள்ளி முதலிய பொருட்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து உதவி செய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் தேசமெங்கும் எழுதியனுப்பி அறிவிப்பு செய்தான்.
அப்பொழுது எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவதற்குப் போக யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவர்களும் ஆசாரியர்களும் லேவியர்களும் அல்லாமல், எவர்களுடைய ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லோரும் எழும்பினார்கள்.
அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற அனைவரும் மனஉற்சாகமாகக் காணிக்கை கொடுத்ததுமல்லாமல், வெள்ளிப் பொருட்களையும், பொன்னையும் மற்ற பொருட்களையும் மிருகஜீவன்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் கொடுத்து, அவர்களுடைய கைகளைத் திடப்படுத்தினார்கள்.
நேபுகாத்நேச்சார் [* நேபுகாத்நேச்சார் பாபிலோனின் இராஜாவாக கிமு 605 லிருந்து 562 வரை ஆட்சி செய்தான். கிமு 597 ல் முற்றுகையிட்டு, கிமு 586 ல் எருசலேமின் ஆலயத்தை அழித்துப்போட்டான். 597 ல் 586 ல் 582 ல் யூதாவிலிருந்து பலரை சிறைப்படுத்தி பாபிலோனுக்கு கொண்டுச் சென்றான். 597 லும் 586 லும் ஆலயத்திலுள்ள விலையேறப்பெற்ற பொருட்களை கொள்ளையடித்து சென்றான் ] எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த யெகோவாவுடைய ஆலயத்து பொருட்களையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.