அந்தப் பீடத்தின் எல்லா பணிப்பொருட்களாகிய சாம்பல் எடுக்கும் சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பணிப்பொருட்களையெல்லாம் வெண்கலத்தினால் செய்தான்.
பிராகாரத்தின் வாசலின் தொங்கு திரை இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்ட சித்திரத்தையல் வேலையாக இருந்தது; அதின் நீளம் இருபது முழம், அதின் அகலமும் உயரமும் பிராகாரத்தின் தொங்கு திரைகளைப்போல ஐந்து முழம்.
மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் மகனாகிய இத்தாமாரின் கையிலே லேவியர்களின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் ஆசரிப்புக்கூடாரத்தின் பொருள்களின் தொகை இதுவே.
பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகள் எல்லாவற்றிற்கும் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டுச் செலவான பொன்னெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது சேக்கல் [* ஏறக்குறைய 1,050 கிலோ பொன்.] நிறையுமாக இருந்தது.
சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் [† சேக்கலின்படி 19.5 கிராம் 1 தாலந்து 35 கிலோ எடை.] நிறையுமாக இருந்தது.
எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பதுபேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.
அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்க்கப்பட்டது; பாதத்திற்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவானது.
சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், ஆசரிப்புக்கூடாரத்தின் எல்லா ஆப்புகளையும், சுற்றுப்பிராகாரத்தின் எல்லா ஆப்புகளையும் செய்தான்.