அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தின் திருப்பணிகளைச் சேர்ந்த எல்லா வேலைகளையும், யெகோவா கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், வேலை செய்யத்தெரிந்த யெகோவாவால் ஞானமும், புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரோடும் செய்யத்தொடங்கினார்கள்.
அவர்கள், இஸ்ரவேலர்கள் திருப்பணிகளின் எல்லா வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருட்களையெல்லாம், மோசேயிடம் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் மக்கள் காலைதோறும் தங்களுக்கு விருப்பமான காணிக்கைகளை அவனிடம் கொண்டுவந்தார்கள்.
அப்பொழுது மோசே “இனி ஆண்களோ பெண்களோ பரிசுத்த ஸ்தலத்திற்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம்” என்று முகாம் எங்கும் சொல்லும்படிக் கட்டளையிட்டான்; இப்படியாக மக்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.
வேலை செய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள அனைவரும் ஆசரிப்புக்கூடாரத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், வித்தியாசமான நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைச் செய்தான்.
அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டாக்கினான்; ஒரு பலகையின்கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களையும் செய்துவைத்து;
ஆசரிப்புக்கூடாரத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்கு புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் செய்தான்.
அதற்குச் சீத்திம் மரத்தினால் நான்கு தூண்களைச் செய்து, அவைகளைப் பொன் தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால்செய்து, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.
அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவான ஆணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்; அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாக இருந்தது.