யெகோவா என்னுடைய பெலனும் என்னுடைய கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என்னுடைய தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்செய்வேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன், என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும், என்னுடைய பட்டயத்தை உருவுவேன், என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான்.
பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட மக்கள் கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய கரத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவில்லாமல் இருப்பார்கள்.
பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் கடலில் நுழைந்தது; யெகோவா கடலின் தண்ணீரை அவர்கள்மேல் திரும்பச்செய்தார்; இஸ்ரவேலர்களோ கடலின் நடுவே காய்ந்த நிலத்திலே நடந்துபோனார்கள்” என்று பாடினார்கள்.
ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன்னுடைய கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; எல்லாப் பெண்களும் தம்புருக்களோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
பின்பு மோசே இஸ்ரவேல் மக்களைச் செங்கடலிலிருந்து பயணமாக நடத்தினான். அவர்கள் சூர் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்திரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள்.
அவர்கள் மாராவிற்கு வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்திற்கு மாரா என்று பெயரிடப்பட்டது.
மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடன், அது இனிமையான தண்ணீரானது. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு கட்டளையையும், ஒரு நீதிநெறிகளையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:
நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் யெகோவா” என்றார்.