நீங்கள் இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளட்டும்.
ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் சாப்பிடுவதற்குப் போதுமானவர்களாக இல்லாமற்போனால், அவனும் அவன் அருகிலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கைக்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் சாப்பிடத்தக்கதாக எண்ணிக்கைபார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள எல்லாவற்றையும் ஒன்றாக நெருப்பினால் சுட்டதாக அதைச் சாப்பிடுங்கள்.
அதைச் சாப்பிடவேண்டிய முறையாவது, நீங்கள் உங்களுடைய இடுப்பில் கச்சையைக் கட்டிக்கொண்டும், உங்களுடைய கால்களில் காலணியை அணிந்துகொண்டும், உங்களுடைய கையில் தடியைப் பிடித்துக்கொண்டும் அதை விரைவாக சாப்பிடுங்கள்; அது யெகோவாவுடைய பஸ்கா.
அந்த இரவிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள்வரை, முதலில் பிறந்திருக்கிறவைகளையெல்லாம் நாசம்செய்து, எகிப்து தெய்வங்களின்மேல் நீதியைச் செலுத்துவேன் ; நானே யெகோவா.
நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாக இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராமல் இருக்கும்.
அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாக இருக்கட்டும்; அதைக் யெகோவாவுக்குப் பண்டிகையாக அனுசரியுங்கள்; அதை உங்களுடைய தலைமுறைதோறும் நிரந்தர கட்டளையாக அனுசரிக்கவேண்டும்.
புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடுவீர்களாக; முதலாம் நாளிலே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம்நாள்துவங்கி ஏழாம் நாள்வரையும் புளித்த அப்பம் சாப்பிடுகிறவன் எவனோ அவன் இஸ்ரவேலர்களிலிருந்து துண்டிக்கப்படுவான்.
முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யக்கூடாது; அவரவர் சாப்பிடுவதற்குத் தேவையானதுமட்டும் உங்களால் செய்யப்படலாம்.
புளிப்பில்லா அப்பப்பண்டிகையை அனுசரியுங்கள்; இந்த நாளில்தான் நான் உங்களுடைய சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரக் கட்டளையாக இந்த நாளை அனுசரிக்கவேண்டும்.
ஏழுநாட்கள்வரை உங்களுடைய வீடுகளில் புளித்தமாவு காணப்படக்கூடாது; எவனாவது புளிப்பிடப்பட்டதைச் சாப்பிட்டால், அவன் அந்நியனானாலும் சொந்த தேசப் பிறப்பானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இல்லாமல் துண்டிக்கப்படுவான்.
ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணத்தில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; அதிகாலைவரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம்.
யெகோவா எகிப்தியர்களை நாசம் செய்வதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, யெகோவா அழிக்கிறவனை உங்களுடைய வீடுகளில் உங்களை நாசம் செய்வதற்கு வரவிடாமல், வாசற்படியிலிருந்து விலகிக் கடந்துபோவார்.
இது யெகோவாவுடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியர்களை நாசம் செய்து, நம்முடைய வீடுகளைத் தப்பிக்கச்செய்தபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களுடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும்” என்றான். அப்பொழுது மக்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்.
அப்பொழுது பார்வோனும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்களும் எகிப்தியர்கள் அனைவரும் இரவிலே எழுந்தார்கள்; கொடிய கூக்குரல் எகிப்திலே உண்டானது; சாவு இல்லாத ஒரு வீடும் இல்லை. கானானுக்கான பயணம்: ராமசேசைவிட்டுக் சுக்கோத்திற்குப் போனார்கள்
எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லாத அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் இருக்கமுடியாதபடி துரத்திவிடப்பட்டதால், அது புளிக்காமல் இருந்தது; அவர்கள் தங்களுடைய பயணத்திற்கென்று ஒன்றும் ஆயத்தம்செய்யவில்லை.
யெகோவா அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்ததால், இது அவருக்கென்று முக்கியமாக அனுசரிக்கத்தக்க இரவானது; இஸ்ரவேல் சந்ததியார் எல்லோரும் தங்கள் தலைமுறைதோறும் யெகோவாவுக்கு முக்கியமாக அனுசரிக்கவேண்டிய இரவு இதுவே.
அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சாப்பிடவேண்டும்; அந்த இறைச்சியில் கொஞ்சம்கூட வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது.
அந்நியன் ஒருவன் உன்னிடம் தங்கி, யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் எல்லோரும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை அனுசரிக்கவேண்டும்; அவன் சொந்த தேசத்தில் பிறந்தவனாக இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவரும் அதில் சாப்பிடவேண்டாம்.