தேவ சமுகத்தில் நீ துணிகரமாக உன்னுடைய வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய், ஆதலால் உன்னுடைய வார்த்தைகள் சுருக்கமாக இருப்பதாக.
உன்னுடைய சரீரத்தைப் பாவத்திற்குள்ளாக்க உன்னுடைய வாய்க்கு இடம்கொடுக்காதே; அது புத்திமாறி செய்தது என்று தூதனுக்குமுன்பு சொல்லாதே; தேவன் உன்னுடைய வார்த்தைகளினாலே கோபம் கொண்டு, உன்னுடைய கைகளின் செயல்களை ஏன் அழித்துக்கொள்ளவேண்டும்?
தன்னுடைய தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாக வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாகத் திரும்பப் போவான்; அவன் தன்னுடைய பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன்னுடைய கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை.
இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாட்களெல்லாம் மனிதன் சாப்பிட்டுக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் உழைத்த அனைத்தின் பலனையும் அனுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு.
தேவன் ஐசுவரியத்தையும் செல்வத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே சாப்பிடவும், தன்னுடைய பங்கைப் பெறவும், தன்னுடைய பிரயாசத்திலே மகிழ்ச்சியாக இருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய வெகுமதி.