அவர் அனைத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்களுடைய உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆரம்பம்முதல் முடிவுவரை செய்துவரும் செயல்களை மனிதன் கண்டுபிடிக்கமாட்டான்.
தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடு ஒன்றும் கூட்டவும் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவும் கூடாது; மனிதர்கள் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.
எல்லா எண்ணங்களையும் எல்லா செயல்களையும் நியாயந்தீர்க்கும்காலம் இனி இருக்கிறபடியால் நீதிமானையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.
மனிதர்கள் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படி தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனிதர்களுடைய நிலைமையைக்குறித்து என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.
மனிதர்களுக்கு சம்பவிப்பது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஒரே மாதிரி நடக்கும்; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; உயிர்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைவிட மனிதன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.
இப்படியிருக்கிறபடியால், மனிதன் தன்னுடைய செயல்களில் மகிழ்ச்சியாக இருக்கும் நன்மையைத்தவிர, வேறே நன்மை இல்லையென்று கண்டேன்; இதுவே அவனுடைய பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படி அவனைத் திரும்பிவரச்செய்கிறவன் யார்?