“யெகோவா எனக்குச் சொன்னபடி நாம் திரும்பி, சிவந்த சமுத்திரத்திற்குப் போகிற வழியாக வனாந்திரத்திற்குப் பிரயாணம்செய்து, அநேக நாட்கள் சேயீர் நாட்டை சுற்றித்திரிந்தோம்.
மக்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் சந்ததியான உங்கள் சகோதரர்களின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்;
அவர்களோடு போர்செய்யவேண்டாம்; அவர்களுடைய தேசத்திலே ஒரு அடி நிலத்தைக்கூட உங்களுக்குக் கொடுக்கமாட்டேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சொந்தமாகக் கொடுத்திருக்கிறேன்.
உன் தேவனாகிய யெகோவா உன் கையின் செயல்களிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்திரத்தின்வழியாக நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருடங்களும் உன் தேவனாகிய யெகோவா உன்னுடன் இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.
அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: நீ மோவாபை துன்பப்படுத்தாமலும், அவர்களுடன் போர்செய்யாமலும் இரு; அவர்களுடைய தேசத்தில் உனக்கு ஒன்றையும் சொந்தமாகக் கொடுக்கமாட்டேன்; ஆர் என்னும் பட்டணத்தை லோத் சந்ததிக்குச் சொந்தமாகக் கொடுத்தேன்.
ஓரியர்களும் சேயீரில் முன்னே குடியிருந்தார்கள்; யெகோவா தங்களுக்குச் சொந்தமாகக் கொடுத்த தேசத்தாரை இஸ்ரவேல் துரத்தினதுபோல, ஏசாவின் சந்ததியினர் அந்த ஓரியர்களைத் துரத்தி, அவர்களைத் தங்கள் முகத்திற்கு முன்பாக அழித்து, அவர்கள் இருந்த பகுதியில் குடியேறினார்கள்.
அம்மோன் மக்களுக்கு எதிராகச் சேரப்போகிறாய்; நீ அவர்களைத் துன்பப்படுத்தவும் அவர்களுடன் போர்செய்யவும் வேண்டாம்; அம்மோன் மக்களின் தேசத்தில் ஒன்றையும் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கமாட்டேன்; அதை லோத்தின் சந்ததியினருக்குச் சொந்தமாகக் கொடுத்திருக்கிறேன்.
அதுவும் இராட்சதருடைய தேசமாக கருதப்பட்டது; முற்காலத்தில் இராட்சதர்கள் அதிலே குடியிருந்தார்கள், அம்மோனியர்கள் அவர்களைச் சம்சூமியர்கள் என்று சொல்லுகிறார்கள்.
அவர்கள் திரளானவர்களும் ஏனாக்கியர்களைப்போல உயரமானவர்களுமான பலத்த மக்களாயிருந்தார்கள்; யெகோவாவோ சேயீரில் குடியிருந்த ஏசாவின் சந்ததிக்கு முன்பாக ஓரியர்களை அழிக்க, அவர்கள் அந்த மக்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த பகுதியில் இந்நாள்வரைக்கும் குடியிருக்கிறதுபோலவும்,
நீங்கள் எழுந்து பிரயாணம்செய்து, அர்னோன் ஆற்றைக் கடந்துபோங்கள்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் என்னும் எமோரியனையும் அவனுடைய தேசத்தையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; இதுமுதல் அதைச் சொந்தமாக்கிக்கொள்ள அவனோடு போரிடு.
வானத்தின்கீழ் எங்குமுள்ள மக்கள் உன்னாலே திகிலும் பயமும் அடையும்படி இன்று நான் செய்யத் துவங்குவேன்; அவர்கள் உன்னுடைய புகழைக் கேட்டு, உன்னிமித்தம் நடுங்கி, வேதனைப்படுவார்கள் என்றார்.
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோவதற்கு, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு அனுமதி கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய யெகோவா அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பதற்காக, அவனுடைய மனதையும், இருதயத்தையும் கடினப்படுத்தியிருந்தார்.
அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவனுடைய தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவனுடைய தேசத்தை வசப்படுத்தி, சொந்தமாக்கிக்கொள் என்றார்.
அக்காலத்தில் அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த பெண்களையும், ஆண்களையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் முற்றிலும் அழித்தோம்.
அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், ஆற்றுக்கு அருகிலிருக்கிற பட்டணமும் துவங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்து நிற்கத்தக்க பாதுகாப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும் நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்கு ஒப்புக்கொடுத்தார்.