“ஆபீப் [* ஆபிப் மாதம் எபிரேயர்கள் காலண்டரின் முதல் மாதமாகும், பிறகு நிசான் என்றும் அழைக்கப்பட்டது. இது மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரைக்கு சமமாகும்] மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கக்கடவாய்; ஆபீப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்.
ஏழுநாட்களளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படக்கூடாது; நீ முதல் நாள் மாலையில் செலுத்திய பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இரவுமுழுதும் விடியற்காலம் வரைக்கும் வைக்கவேண்டாம்.
நீ ஆறு நாட்களும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும், ஏழாம் நாள் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அனுசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய யெகோவாவுக்கென்று ஆசரித்து, உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததற்குத்தக்கதாக உன்னால் முடிந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,
உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லா செயலிலும் உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்தபடியால், யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் உன் தேவனாகிய யெகோவாவுக்கு ஏழு நாட்கள் பண்டிகையை ஆசரித்து சந்தோஷமாயிருப்பாயாக.
வருடத்தில் மூன்றுமுறை புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லோரும் உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.
ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய யெகோவா உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.
“உன் தேவனாகிய யெகோவா உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவர்களையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.