உன் மக்களின் பாதுகாப்பிற்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். எந்தவொரு தேசத்தார்களும் தோன்றினதுமுதல் அக்காலம்வரை உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புத்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் மக்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.
தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலம்வரை இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக மறைத்துவைத்து, இந்தப் புத்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போகும் என்றான்.
அப்பொழுது சணல்உடை அணிந்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய மனிதன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்திற்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் ஆகும் என்றும்; பரிசுத்த மக்களின் வல்லமையைச் சிதறடித்தல், முடிவு பெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக்கேட்டேன்.