Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Daniel Chapters

Daniel 10 Verses

1 {மனிதனைக்குறித்த தரிசனம்} [PS] பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ஆட்சிசெய்த மூன்றாம் வருடத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளிப்படுத்தப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் மாபெரும் போருக்குரியதுமாக இருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் அர்த்தத்தை அறிந்துகொண்டான்.
2 அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரம்முழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன்.
3 அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறும்வரை சுவையான உணவை நான் சாப்பிடவுமில்லை, இறைச்சியும் திராட்சைரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் நறுமணத்தைலம் பூசிக்கொள்ளவுமில்லை.
4 முதலாம் மாதம் இருபத்துநான்காம்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து,
5 என் கண்களை ஏறெடுக்கும்போது, சணல்உடை அணிந்து, தமது இடுப்பில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு மனிதனைக் கண்டேன்.
6 அவருடைய உடல் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் மக்கள்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.
7 தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனிதர்களோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி, ஓடி ஒளிந்துகொண்டார்கள்.
8 நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போனது; திடனற்றுப்போனேன்.
9 அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகம்வெளிறி, தூங்குகிறவனைப்போலத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்தேன்.
10 இதோ, ஒரு கை என்னைத் தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்கும்படி என்னைத் தூக்கிவைத்தது.
11 அவன் என்னை நோக்கி: பிரியமான மனிதனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்மேல் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லும்போது நடுக்கத்தோடே எழுந்து நின்றேன்.
12 அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவங்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்.
13 பெர்சியா ராஜ்ஜியத்தின் அதிபதி இருபத்தொரு நாட்கள்வரை என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய [* தேவ தூதர்களின் ஒரு முக்கிய தலைவன்] மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தங்கியிருந்தேன்.
14 இப்போதும் கடைசி நாட்களில் உன் மக்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாட்கள் செல்லும் என்றான்.
15 அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லும்போது, நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன்.
16 அப்பொழுது மனிதனின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத் தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: ஐயா, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்.
17 ஆகையால் என் ஐயாவுடைய அடியேன் என் ஐயாவோடே எப்படிப் பேசமுடியும்? இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை என்றேன்.
18 அப்பொழுது மனிதசாயலான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைப் பெலப்படுத்தி,
19 பிரியமானவனே, பயப்படாதே; உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடன்கொள், திடன்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசும்போது நான் திடன்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.
20 அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் என்னவென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே போரிடத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்.
21 சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய [† இஸ்ரவேலை காக்கும் தேவதூதன்] மிகாவேலைத் தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாகப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை. [PE]
×

Alert

×